
திருடர்களைக் காக்கும் ‘டீல்’ அரசியல் வேண்டாம், மக்கள் ஆணைக்கு மதிப்பளி! ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் உடன் பதவி விலக வேண்டும். இவ்வாறு வலியுறுத்தி மருத்துவ பீட மாணவர்களால் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
பேரணியைக் கலைப்பதற்காக போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகை தாக்குதல் என்பன பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டதால் பதற்ற நிலை உருவானது.
‘நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், ஜனாதிபதி, பிரதமர் உள்ளடங்கலான அரசாங்கம் பதவி விலக வேண்டும்.’ என வலியுறுத்தி கொழும்பு, தாமரைத் தடாக வளாகத்திலிருந்து மருத்துவபீட மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது.
கொழும்பு, கோட்டையிலுள்ள உலக வர்த்தக நிலையத்துக்கு முன்பாக, இலங்கை வங்கி மாவத்தை ஊடாக காலிமுகத்திடல் நோக்கி செல்வதற்கு முற்பட்டனர். அவ்வழியில் வீதித்தடை அமைக்கப்பட்டிருந்தது. பொலிஸார், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மருத்துவபீட மாணவர்கள் வீதத்தடைகளை அகற்றி முன்னோக்கி நகர்வதற்கு முற்பட்டவேளை, முதலில் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பதற்ற நிலை உருவானது.
‘இந்த அரசாங்கத்தை விரட்டும்வரை ஓயப்போவதில்லை.’ என மாணவர்கள் சூளுரைத்தனர்.
இதேவேளை நேற்றுமுன்தினமும் இதேயிடத்தில் கோத்தாக கோகமவின் 50ஆவது நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றோர் மீதும் பொலிஸார் கண்ணீர்ப்புகைக்குண்டு தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

