
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுப்பிட்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலைக்கு அருகாமையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில், நல்லூர் நாயன்மார்கட்டைச் சேர்ந்த ஆரியரத்தினம் திருக்குமார் (வயது – 36) என்ற இளைஞன் உயிரிழந்ததுடன், நல்லூர் கந்தன்குளத்தைச் சேர்ந்த ரட்ணசீலன் சுஜீபன் (வயது – 24) என்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.
வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சிறுப்பிட்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலைக்கு அருகிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்துடன் மோதுண்டது. சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் முழுமையாகச் சேதமடைந்துள்ளது.

