பயிர்ச்செய்கையை கைவிட வேண்டாம்; விவசாயிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

உரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் பல நாடுகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணம் கொண்டும் யால பருவ பயிர்ச்செய்கையை கைவிட வேண்டாம் என அனைத்து விவசாயிகளுக்கும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யால பருவத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தணித்தல் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான விரிவான அரச – தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இறக்குமதி, விநியோகம், முறையான முகாமைத்துவம், விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு என்பனவற்றிற்காக தேசிய உரக் கொள்கையொன்று துரிதமாக வகுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இரசாயன அல்லது கரிம உரங்களைப் பயன்படுத்தி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாய அமைச்சின் பூரண ஈடுபாடு வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கந்தகாடு பண்ணைகளை சோளம், சோயா மற்றும் ஏனைய பயிர்களை பயிரிடுவதற்காக விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதிகளவான விவசாயம் செய்யப்படாத காணிகள் அரசாங்கத்திற்குச் சொந்தமாக உள்ளதால், அந்தக் காணிகளை இனங்கண்டு இளம் பயிர்ச் செய்கையாளர்களிடம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *