நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விலைவாசி உயர்வு போன்ற அத்தியாவசிய நெருக்கடிகள் என்பவற்றைக் கண்டித்து அரசிற்கு எதிராக தெற்கில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடக்கில் உள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்து இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விலைவாசி உயர்வு போன்ற அத்தியாவசிய நெருக்கடிகள் என்பவற்றைக் கண்டித்து அரசிற்கு எதிராக இளையோர் போராடிவரும் நிலையில் அத்தகைய போராட்டம் வடக்கிலும் நடக்குமா? நடக்கிறதா? என்ற தோரணையில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம் விசாரணை நடைபெறுகின்றது.
இது ஒருவகை அச்சுறுத்தல் என்றே தோன்றுகின்றது. காலம் காலமாக உரிமைக்காக உயிருக்காக உறவுகளுக்காகப் போராடி நொந்துபோய் ஏதோ நடப்பது நடக்கட்டும் என்ற பெருமூச்சோடு “அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்” என்ற நம்பிக்கையோடு, தெற்கில் இன்று மக்கள் கொதித்தெழுந்ததை ஏளனம் செய்யாமல் இன்னும் எமக்குத்தான் துன்பங்கள் இழப்புகள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அமைதியாக இருக்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கு தொடர்ந்தும் அச்சத்தை ஊட்ட நினைப்பது வேடிக்கையானது. வேதனைக்கு உரியது.
இதனை விசனமாக வெளியிடுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. ஏனெனில் அது எமது தலைவிதி. கல்வியில் கடைநிலை. பொருளாதாரத்தில் கடைநிலை. உற்பத்தியில் கடைநிலை. தொழில் வழங்கலில் கடைநிலை. இவற்றை சீர்செய்ய எவராலும் முடியாது. யாருமே உதவிக்கும் வரமாட்டார்கள்.
தெற்கின் போராட்டம் பற்றி தமிழ் அரசியல்வாதிகள் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அப்போராட்டத்தின் பிரதம செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் படித்தோம்.
ஆகையால் ஜனநாயக வழிமுறைப் போராட்டங்களை நசுக்குவதை விட்டுவிட்டு அப்போராட்டங்களுக்கான தீர்வை வழங்க முயற்சி செய்யுங்கள். உண்பதற்கே வழியில்லாமல் இருக்கும் எங்களை தொடர்ந்தும் அச்சுறுத்தாதீர்கள்.
இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.