கொழும்பு,மே 31
நாடளாவிய ரீதியில் கடுமையான பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. இந்நிலையில் 7,000 பேக்கரிகளில் 3500 க்கும் அதிகமான பேக்கரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
சமையல் எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் கோதுமை மா ஆகியவற்றுக்கு சந்தையில் நிலவும் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக எதிர்காலத்தில் 90 வீதமான பேக்கரிகள் மூடப்படும் அபாய நிலையில் உள்ளதாக ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
எமக்கு மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காணப்படுகிறது. சமையல் எரிவாயு பற்றாக்குறை, டீசல், பெற்றோல் உள்ளிட்ட தேவைகளும் எமக்கு உள்ளது. ஆகவே, இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சாகல காரியவசமிடம் சனிக்கிழமை பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்தோம்.
இந்த சந்திப்பின்போது எமது தேவைகள் மற்றும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டியிருந்தோம். இதன் பலனாக சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எமது பிரச்சினைகளை தெரியப்படுத்தி அவர்கள் ஊடாக எமக்கான தேவைகளை பெற்றுத் தருவதாக கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடருமானால் எதிர்காலத்தில் பேக்கரி பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்படக்கூடும் என்றார்.