தமிழ் மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, தமிழர் பகுதிகளில் பெரும்பான்மையினருக்கு உயர் நியமனங்களை அரசாங்கம் வழங்குகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபைக்கான பொதுச் செயலாளராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த சிங்க மொழி பேசும் ஒருவரை இந்த அரசாங்கம் நியமித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஒரு மாகாணத்தில் எந்த மொழி முதன்மை செலுத்துகின்றதோ அந்த மொழியின் அடிப்படையில்தான் நியமனங்கள் இருக்கவேண்டுமென சட்ட ஏற்பாடுகள் இருக்கின்ற நிலையில் அரசாங்கம் புதிய செயலாளரை மிகவும் வேகமாக நியமித்துள்ளதாக எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கு பொதுச் செயலாளராக 12க்கும் மேற்பட்டவர்கள் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். ஆனாலும் தகுதி குறைந்த ஒருவரை அரசாங்கம் நியமனம் செய்துள்ளமையை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என அவர் கூறியுள்ளார்.
எனவே இந்த விடயத்துக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் முன்னெடுப்போம் என எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாகவுள்ள நிலையை பயன்படுத்தி, அரசாங்கம் தமிழர்களை துண்டாக்கிவிட்டு. சிங்களவர்களை வடக்கு பகுதியிலும் கொண்டுவந்து நியமனம் செய்யுமளவிற்கு முன்னேறியிருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.