இலங்கைக்கு வழங்கப்பட்ட பண்டைய பெயர்களில் தமிழின் தாக்கம்
சஞ்சீவி சிவகுமார்
பண்டைக்காலத்தில் இலங்கையும் இந்தியாவும் இணைந்த நிலத் தொடர்பு கொண்டு காணப்பட்டமை பற்றி சில வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. சங்ககாலத்தில் தமிழகத்துடன் இலங்கை முதலிய பகுதிகளும் அடங்கியிருந்தன என பி.ரி.ஸ்ரீநிவாச ஐயங்கார் முதலிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுகுறித்து வரலாற்றுக் காலத்தில் இலங்கையும் தமிழகமும் ஒன்றிணைந்த திராவிட பண்பாடு நிலவிய பிரதேசங்களாகவும் நேரடித் தொடர்புகளை கொண்டு காணப்பட்ட மையையும் வரலாற்று இலக்கிய தகவல்கள் தெளிவுபடுத்துகின்றன.
இலங்கை குறித்து பேசப்படும் மிகப் பண்டைய பெயர்களில் ஒன்று ‘பழசுமுண்டு’ என்பதாகும். இதை சிலர் இலங்கையின் காலத்தால் முந்தைய ஒரு தலைநகரம் எனவும் கொள்வர். இலங்கையின் இராவணன் காலத்துத் தலைநகரம் திருகோணமலைக்கு அருகில் இருக்கக்கூடிய கடல் கொண்ட பகுதி ஆகவும் கொள்ளப்படுவதுண்டு. எது எப்படியோ, ‘பழசு’ என்பது காலத்தால் முந்தியது எனும் பொருளையும் ‘முண்டு’ என்பது மேடான பகுதி என்பதையும் குறிக்கக்கூடிய தமிழ்ச் சொற்களாகும். ஆராய்ச்சியாளர்கள் இந்தச் சொல்லை Palasuemundu என ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரு வேற்றுமொழிச் சொல் போல தோன்றினாலும் பொருள் பொதிந்த தமிழ்ச் சொல்லாக இது காணப்படுகிறது.
சிங்கள மொழியின் தோற்றம் இன்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒன்று என பேராசிரியர் புஞ்சி பண்டா எக்கநாயக்க சுட்டிக்காட்டுவார். ஆனால் இலங்கை என்ற தமிழ்ப் பதம் பழையது. சில பழைய நூல்களில் காணப்படும் செய்யுள்களில் இலங்கையை சிறப்பிக்க ‘சீரிலங்கை’ எனும் சிறப்புப் பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இதுவே ஸ்ரீலங்கா என சிங்கள உருமாற்றத்தை பெற்றிருக்க முடியும். அப்படியாயின் இலங்கையை சிங்களத் தீவு என்கிறார்களே என்ற கேள்வியும் எழலாம். இப்பெயர் ‘சிம் ஹலடீவ்’ எனும் சமஸ்கிருத மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. ‘சிம் ஹல’ என்பதன் பொருள் கருவாப்பட்டை என்பதாகும். இலங்கை கருவாப்பட்டை விளையும் முதன்மையான நாடாக இருந்ததனால் இப்பெயர் வழங்கப்பட்டதாக ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை தனது ‘இலங்கை சரித்திர சூசனம்’ எனும் நூலில் குறிப்பிடுவார்.
இலங்கைக்கு ‘தாமிரவருணி’ என்ற ஒரு பெயரும் காணப்படுகிறது. தாமிரம் என்பது செம்பு அல்லது செம்மை நிறத்தை குறிக்கும். செந்நிற மண் கொண்ட பிரதேசம் என்பதைக் குறிக்க இப்பெயர் பயன்படுத்தப்பட்டது.
இலங்கைக்கு செரண்டிப் என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இது ‘சேரன் தீவு’ என்ற சொல்லில் இருந்து திரிபடைந்து வந்த வடிவம் என ஆய்வாளர்கள் சிலர் விளக்குகின்றனர். இலங்கையில் தொடக்ககால குடியேற்றமாக சேரர்களின் குடியேற்றம் கொள்ளப்படுவதுண்டு. இதனால் இலங்கை சேரர்களின் தீவு என வர்ணிக்கப்பட்டது. இவ்வாறு சேரன் தீவு, செரன்டிவ் ஆயிற்று.
இந்த வகையில் திராவிட பண்பாட்டோடு நெருங்கிய வரலாற்றுப் பின்புலத்தை இலங்கை தன் பெயர்களின் வழியே தேக்கி வைத்திருக்கிறது.


