ஹற்றன் டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினியின் மரணத்திக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டிய அதேவேளை நிரபராதிகள் எக்காரணத்தை கொண்டும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தண்டிக்கப்படவோ அல்லது வீணாக விமர்சிக்கப்படவோ இடமளிக்கக் கூடாது எனவும் கிண்ணியா நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம்.மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (25) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் வைத்து இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்
ஆனால் சகோதரி ஹிஷாலினிக்கு உரிய நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வீதிக்கு இறங்கி இருக்கின்ற சில அரசியல் வங்குரோத்து காரர்கள் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களை இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் ஒன்றன் மேல் ஒன்றாக பல்வேறு திட்டமிட்ட சதி முயற்சிகளுக்கு முகங்கொடுத்து துன்பப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்ற போது அதில் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது மனிதாபிமானமற்ற செயற்பாடாகும்.
பல்வேறு கோணங்களிலும் பொலிஸ் திணைக்களத்தினால் விசாரணைகள் முடக்கி விடப்பட்டிருக்கின்ற இத்தருணத்தில் அவரையும் அவரது குடும்பத்தையும் பற்றி உண்மைக்கு புறம்பான பல்வேறு செய்திகள் வெளியயிடப்படுவதை ஊடகங்கள் வாயிலாக காணக் கிடைக்கின்றன.
இதற்கு முன்னரும் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, விமர்சனங்கள் வந்த போதிலும் அவற்றுக்கெதிராக நடாத்தப்பட்ட விசாரணைகள் எதிலுமே அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு இருக்கவில்லை.
ஹிஷாலினியின் மரண சம்பவம் திட்டமிட்டு நடைபெற்றதா? எதேச்சையாக நடைபெற்றதா? கொலையா? தற்கொலையா?
ஏன்,எதற்காக, எப்படி, யாரால் என பொலீஸார் கண்டுபிடிக்க முன்னமே ஊடகங்களில் பல்வேறு முரண் பாடான கருத்துக்களை அரசியல் காரணங்களுக்காக வெளியிட்டு மக்களை ஏமாற்றி பலி தீர்க்க முயற்சிப்பது கவலையை தருகின்றது.
இதற்கு முன்னர் 11 யுவதிகள் அவரது இல்லத்தில் பணி புரிந்ததாகவும் அதில் 22 வயது நிரம்பிய யுவதி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும் கூறுகின்றார். இந்த யுவதி தனது வீட்டில் வைத்து ஒன்றையும் கொழும்பில் வைத்து இன்னொன்றையும் முரண்பாடாக கூறுகின்றார். இவ்வளவு நாட்கள் கழிந்து ஏன் இப்போது கூறுகின்றார் என்பதில் எங்களுக்கு சந்தேகம் எழுகின்றது.
அதுமாத்திரமன்றி மனோ கணேசன் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கூட ஹிஷாலினி என்ற அந்த யுவதிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று போராடுகின்றனர். அவர்கள் கூட உரிய விசாரணை நடைபெற வேண்டும் நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கின்ற விடயத்தில் கவனமாக இருக்கின்றார்கள் என்பது எனக்கு புலனாகின்றது.
நேற்று ரிசாட் பதியுதீன் அவர்களின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் திரு ரவிகுமார் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய வெறித்தனமான கருத்துக்கள் அவருடைய கீழ்த்தரமான அரசியல் வங்குரோத்து நிலைமையை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
சகோதரி ஹிஷாலினிக்கான தீர்வினை முறையான நீதி விசாரணையின் மூலம் நீதிமன்றம் வழங்க முன்னர் அரசியல் வக்கிரம் கொண்டு வீணான விமர்சனங்களை செய்து இனங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுவதற்கோ அல்லது ஒரு நிரபராதியை தண்டிப்பதற்கோ விமர்சனங்களுக்குட் படுவதற்கோ, இடமளிக்க கூடாது.
எனவே இவ்வாறான துரதிர்ஷ்டவசமான கடினமான சூழ்நிலையில் மிகவும் நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என அவ்வாறான அரசியல் வங்குரோத்துக் காரர்களையும் ஊடகங்களையும் வினையமாக கேட்டுக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.