இந்திய கடனுதவி அடங்கலாக நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற 330 மில்லியன் அமெரிக்க டொலர் இதுவரை ஒளடத கொள்வனவுக்காக பயன்படுத்தப்படவில்லை என கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றியக்குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரச வைத்தியசாலைகளில் நிலவும் ஒளடத தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட ஆராய்வுகளின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்வரும் 7 ஆம் திகதி கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றியக்குழுவில் முன்னிலையாகுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், எதிர்வரும் 8ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு மொரட்டுவ பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, எதிர்வரும் 9ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு இலங்கை மின்சார சபைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 2018 மற்றும் 2019ஆம் வருடங்களுக்கான இலங்கை மின்சார சபையின் கணக்காய்வு அறிக்கை மற்றும் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, நாட்டின் தற்போதைய உணவு நெருக்கடி தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 10ஆம் திகதி கோபா எனப்படும் அரச பொது கணக்குகள் பற்றியக்குழுவில் அதன் தலைவர் திஸ்ஸ வித்தாரனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
பிற செய்திகள்

