
மகாபலிபுரத்தில் நள்ளிரவு விருந்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய போது நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் சிக்கிய யாஷிகாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பஞ்சாபை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் மாடலாக வலம் வருகிறார். துருவங்கள் 16 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து அவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலம் கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இவர் கைவசம் உத்தமன், ராஜ பீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்றிரவு நள்ளிரவு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பினார்.
காரை யாஷிகா ஆனந்த் ஓட்டியதும் அவருக்கு அருகே அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி அமர்ந்திருந்தார். அப்போது அவரது கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் சூலேறிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
தலைக்குப்புற கவிழ்ந்த காரில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர். அவருடன் காரில் இருந்த தோழி வள்ளிச்செட்டி பவானி அதே இடத்திலேயே உயிரிழந்தார். இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்.
மேலும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த சையது, ஆமீர் ஆகிய இரு ஆண் நண்பர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விபத்தில் சிக்கிய காரை மீட்டனர். மேலும் விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நள்ளிரவு பார்ட்டி என்பதால் போதையில் யாஷிகா ஆனந்த் காரை ஓட்டினாரா? அவருடன் இருந்தவர்களும் குடித்திருந்தனரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிவேகமாக கார் ஓட்டியதாக யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.