
மத்திய வங்கி 100 மில்லியன் ரூபாவை அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்து வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது என வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாள்களில் இந்திய கடன் வசதியின் கீழ் அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இதனை தவிர, பொருள் இறக்குமதிக்காக மாதாந்தம் 100 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மத்திய வங்கி இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனால் தட்டுப்பாடின்றி பொருள்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
இதேவேளை, அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து இவ்வாறான உதவிகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த கூறினார்.
இதன் மூலம் வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.




