சிறப்புக் கட்டுரை
இலங்கை தமிழர் போராட்ட வரலாற்றின் அன்றைய இரண்டு ஆளுமைகளின் மறைவு தினமான இன்றைய June 5ம் திகதி, அவர்கள் பற்றிய ஆழமான நினைவுகளை மீட்ட வைக்கிறது.
1970,மற்றும் 1980ம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதிகளில். சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக செயல்பட்ட தமிழ் இளைஞர்கள் தொடர்பான பல வழக்குகள் இலங்கையின் பல நீதி மன்றங்களில் கூடுதலாக கொழும்பு சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டன..
குட்டிமணி,தங்கத்துரை வழக்கு, துரையப்பா கொலைவழக்கு,பல வங்கிக் கொள்ளை வழக்குகள் இப்படி பல.இந்த வழக்குகளில் எல்லாம் நீதிமன்றங்களில் தன்னிலையாகவே முன்னிலையாகி கூடுதலானவற்றில் இளைஞர்களுக்கு விடுதலையையும் ,சிலவற்றில் நியாயத்தையும் பெற்றுக் கொடுத்த பெருமைக்குரிய பெருமகனார்,சட்ட விற்பன்னர் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்து இன்றுடன் இருபது வருடங்கள் பூர்த்தி ஆகின்றன.
அன்றைய காலங்களில்,நீண்ட நாட்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யபட்ட பிரதிநிதியாக இருந்த, ஆளுமை மிக்க அரசியல் வாதியான, உடுப்பிட்டி சிங்கம் என அன்றைய இளஞர்களால் விழிக்கப்பட்ட திரு,சிவசிதம்பரம் அவர்கள் 1968ம் ஆண்டு முதல் 1970வரை இலங்கை நாடாளமன்றத்தின் (உப) சபாநாயகராக பதவி வகித்து இலங்கையின் அணைத்து சமூக அரசியல் வாதிகளினதும் நன் மதிப்பை பெற்ற முதல் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களின் வழக்குகுகளில் எல்லாம் அவர் முன்னிலையாகி வாதாடிய காலங்களில் அவர் கடைப்பிடித்த நடை முறைகள்,அவரது நீதிமன்ற ஆளுமைகள் அனைத்தும் அவர்பாலான ஈரப்பை அன்றைய இளைஞர்கள் மத்தியில் மேலும் அதிகரித்தது.
இந்த வழக்குகளில் எல்லாம் அவருக்கு பக்கபலமாய் இருந்து செயல்பட்டஅண்ணன் கரிகாலன் (நவரட்னம்), தலைமையிலான இளம் சட்டத்தரணிகள் குழாமின் தன்னலமற்ற சேவையும் என்றும் நினைவு கூரப்பட வேண்டியதே.
இது போன்ற இவர்களின் அர்ப்பணிப்புகள் அனைத்தும் அரசியல் நலன் சார்ந்த்ததே, எனவும், தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது இவர் சார்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் நகர்வுகளே எனவும் பின்னாட்களில் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டாலும் யதார்த்த வரலாறுகள் மீட்க்கப் பட வேண்டியது அவசியமானதே.
,,,,,,,,,,,

இன்றைய தினத்தின், மற்றொரு வரலாற்று நாயகன் நண்பன் தியாகி சிவக்குமாரன்.
உரும்பிராய் மண்ணில் பிறந்து உரிமைகளுக்காய் உயிர் நீத்த முதல் தற்கொலை போராளியான சிவக்குமாரனின் 48வது நினைவு தினமும் இன்றுதான். ஜேர்மனியின் கிட்லர் காலத்திற்கு பின்னர் தற்கொலை போராட்ட வரலாறு படைத்தவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் தான் என பாடம் எடுக்கும் இன்றைய பல இனவாத ஆய்வாளர்களுக்ககு, 1974ம் ஆண்டு தனது 23வது வயதில் அரச காவல்துறையிடம் உயிருடன் சிக்கக் கூடாது என்கிற ஒற்றை நோக்கில் போலீஸ் அதிகாரி ஒருவர் முன்னிலையிலேயே சயனற் சாப்பிட்டு தன்னுயிரை மாய்த்த சிவகுமாரனின் வரலாறு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உருபிராய் சாந்தியில் அவன் நடாத்திய பறைஎரிப்பு போராட்டம்,ஆலயங்களில் நடாத்தப்பட்ட சமபந்தி போசனங்கள் என்பன அவனின் சமூக சமத்துவ வாழ்வுச் சிந்தனையையும் வெளிப்படுத்தி நின்றன,
அனைவருக்கும் பொதுவான அவனின் நினைவை என்றும் நினைவூட்ட, அவன் போன்ற கம்பீரத்துடன் உரும்பிராய் சந்தியில் இன்றும் நிமிர்ந்து நிற்கும் வெண் கலத்தில் செதுக்கப்பட்ட அவனது உருவச்சிலைக்கு ஒரு நீண்ட அரசியல் வரலாறு உண்டு,
அவன் ஆகுதி ஆகிய 1974ம் ஆண்டு அவனது நண்பர்கள், அவனுடன் செயல்பட்டவர்கள்,ஊர் மக்கள் என அனைவரும் இணைந்து உருவாக்கிய முதல் சிலை, போராட்ட முன்னோடிகளில் ஒருவரான திரு த.முத்துக்குமாரசாமி அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது.அது 1977ம் ஆண்டு கலவரத்தில் சிங்கள பேரினவாதிகளால் உடைக்கப்பட மீண்டும் அதே ஆண்டு அதே இடத்தில் நிறுவப்பட்ட இரண்டாவது சிலையும் 1983ம் ஆண்டு கலவரத்தின் போது இராணுவத்தினரால் சிதைக்கப் படுகிறது. மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆளுமைக் காலத்தில் உருப்பிராய் மக்களால் உருவாக்கப்பட்ட 3வது சிலை புலிகள் அமைப்பின் அன்றைய பொறுப்பாளர் திரு,மாத்தயா அவர்களால் திறக்கப்பட அதுவும் சில நாட்களில் இராணுவத்தினரால் உடைத்தெறியப் படுகிறது.
இறுதியாக அனைத்து அடக்கு முறைகளையும் அணுக வேண்டிய முறையில் அணுகும் வல்லமை படைத்த தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு 2001ம் ஆண்டு EPDP தோழர்களால் திறந்து வைக்கப்பட்ட வெண்கலச் சிலையே இன்றும் உரும்பிராய் மண்ணில் தலை நிமிர்ந்து நிற்கிறது..
அந்த 4வது சிலையே சிவக்குமாருடன் செயல்ப்பட்ட நண்பர்கள் சிலரால் வருட வருடம் புதுமெருகூட்டப் பட்டு இன்றைய நாளின் வணக்க அஞ்சலி மரியாதைகள் கட்சி பேதமற்று இடம் பெறுகின்றது.
ஆக இலங்கை தமிழர்களின் போராட்ட வரலாற்றின் முக்கிய நாட்களின் ஒன்றான இன்றைய நாளுக்கு சொந்தக்காரர்களான இந்த இருவரும் போற்றுதலுக்கு உரியவர்களே என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது..
கட்டுரையாளர்- கோவை




