இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையில் பிரிக்க முடியாத பிணைப்பு காணப்பட்டாலும், மானிடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட பாதகமான செயற்பாடுகள் காரணமாக சுற்றாடல் சார்ந்த தாக்கம் அதிகளவில் ஏற்படுகிறது என கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.
இன்று (05) சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதின் பணிப்புரைக்கமைய, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி பத்மராஜா கலாமதியின் அறிவுருத்தலின் கீழ் திருகோணமலை துறைமுக கடற்கரைப்பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள வீதிகள், சிறுவர் பூங்கா போன்ற பிரசேங்களை தூய்மைப்படுத்தும் பணி கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மானிட செயற்பாடுகளினால் நீர், நிலம், வளி, ஒளி மற்றும் ஒலி போன்றவை மிக வேகமாக மாசடைந்து வருகின்றது. அதனால் உலகில் பாரிய தாக்கம் ஏற்படுகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கிலும், மக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் “உலக சுற்றாடல் தினம்” ஜூன் மாதம் 05 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வருடம் “பூலோகம் ஒரேயொரு குடிமனை” எனும் தொனிப் பொருளில் கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
இன்றைய உலகின் காலநிலை மாற்றங்கள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சூழல் மாசடைதல் போன்ற மூவகைச் சவால்களுக்கு மத்தியில் நாம் வாழ்ந்துகொண்டு வருகின்றோம்.
அதற்கு தொடர்ச்சியாக முகம் கொடுக்க வேண்டியும் ஏற்பட்டுள்ளது. நாம் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படுத்தும் விரும்பத்தகாத அல்லது பாதகமான மீள முடியாத விளைவுகளால் சூழல் மாசடைகின்றது. அதுமாத்திரமின்றி அபிவிருத்தி நோக்கிய மனித நடத்தையினாலும் அதிகளவில் சூழல் மாசடைந்து வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலகம், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை உள்ளிட்ட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் இணைந்து இப்பணியில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.




