விவசாயிகளுக்கான உர மானியத்தை பெற்றுத் தரக் கோரி இந்தியாவுக்கு கடிதம் அனுப்பிய சிறீதரன்!

விவசாயிகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பாக வடக்கு மாகாண விவசாயிகளுக்கான உர மானியத்தை பெற்றுக் கொடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஸ் நடராஜ் க்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இந்திய துணை தூதருக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், இறக்குமதிக்கான தடை, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணிகளால், அனைத்துத் துறைசார்ந்தோரும் பாதிக்கப்பட்டுள்ள போதும், விவசாயிகள் அதிகூடிய தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த நாடு மிகமோசமான உணவுப் பஞ்சம் ஒன்றை எதிர்கொள்ள நேரிடலாம் என்பது துறைசார்ந்தோரின் எதிர்வுகூறலாக அமைந்துள்ளது.

குறிப்பாக, போரின் முழுமையான நேரடித் தாக்கங்களால், நிரந்தர அரச மற்றும் தனியார் வேலை வாய்ப்புகள், தொழிற்பேட்டை வசதிகள், கைத்தொழில் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் பெருவளர்ச்சி கண்டிராத வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே தமது அடிப்படைப் பொருளாதாரத்தைக் கட்டமைத்துள்ளனர்.

இத்தகு சூழலில் கடந்த வருடத்திலிருந்து  நடைமுறைக்கு வந்துள்ள  சேதனப் பசளைகள் மற்றும் கிருமிநாசினிகளுக்கான இறக்குமதித் தடை, அதனால் சந்தையில் இருப்பிலுள்ள பசளை வகைகளின் சடுதியான விலையேற்றம், தற்போதைய எரிபொருள் விலையேற்றமும் தட்டுப்பாடும் உள்ளிட்ட பாதிப்புக்களை சமநேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்குரிய மூலப்பொருட்களின் செலவைக்கூட அதன் அறுவடை மூலம் ஈட்டிக்கொள்ள முடியாத ஆகப்பெரும் அவலத்தின் விளிம்பிற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்தமாதம் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையின் கீழ், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கீழ்வரும் அடிப்படையில், 81,  205.60 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அதற்கான பசளை, மருந்து என்பவற்றை பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் அற்றுப்போயுள்ளதால், வடக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளும் தமது அடிப்படை வாழ்வாதாரத்தை அடியோடு இழந்து, நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஈடுகொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்ட்டுள்ளனர்.

ஈழத் தமிழர்களின் நலனில் தொடர்ந்து அக்கறையும், கரிசனையும் கொண்டிருப்பதோடு, அதற்காக அயராது உழைத்துவரும் எம் தொப்புள்க்கொடி உறவான இந்தியா, எமது விவசாயிகளின் நலனோம்புகைக்கு உதவும் பொருட்டு, ஏக்கருக்கு இரண்டு அந்தர் வீதம் ஆகக்குறைந்தது 8121 மெற்றிக்தொன் யூரியாப் பசளைகளை உடனடி உதவியாக வழங்க ஆவனசெய்ய வேண்டுமென்று தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *