ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை! கோட்டா

ஜனாதிபதி முறைமை மற்றும் நாடாளுமன்ற முறைமை ஆகிய இரண்டையும் இணைத்து செயற்படுத்த முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் அல்லது நாடாளுமன்றம் ஆட்சி முறைமையில் இருந்து விலக்க வைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி முறைமை காணப்பட்டால் அதற்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழித்து விட்டு, பிரித்தானிய நாடாளுமன்ற முறைமையை நோக்கி செல்ல வேண்டும்.

தம்மை பதவி விலகுமாறு கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும், தமது பதவிக் காலத்தில் எஞ்சியுள்ள இரண்டு வருடங்களை நிறைவு செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

நாட்டை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள நிதிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு முன்னரேனும் சர்வதேச நாணய நிதியத்துக்குச் சென்றிருந்தால் தற்போதைய நெருக்கடி நிலைமையைத் தவிர்த்திருக்க முடியும் என ஜனாதிபதி தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் தான் உதவி கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடனும் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியுள்ளதாகவும், மசகு எண்ணெய் விநியோகத்திற்கான நீண்டகால ஒப்பந்தங்கள் தொடர்பில் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள் அல்லது இராணுவத்தினரைக் குறைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், புதிய ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதைக் குறைத்து நிவாரண முறையொன்றுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *