தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது – மீண்டும் போட்டியிட மாட்டேன்: ஜனாதிபதி

தோல்வியடைந்த ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்தோடு, பல மாதங்களாக வீதிப் போராட்டங்கள் தம்மை பதவி நீக்கம் செய்யுமாறு அழைப்பு விடுத்த போதிலும் தனது பதவிக்காலத்தில் எஞ்சிய இரண்டு வருடங்களையும் முடிப்பதாக உறுதியளித்த அவர், மீண்டும் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டிற்கு தனது வெற்றிகரமான சேவைகளை பிரதிபலிக்க விரும்புவதாக ஜனாதிபதி கூறினார்.

மார்ச் நடுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர். இதனால் அவர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எரிபொருளில் இருந்து மருந்து வரை கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்தமை, பணவீக்கத்தை 40வீதமாக உயர்த்தியமை மற்றும் வரலாற்றுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வழிவகுத்தமை என கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மே மாதத்தில் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் இரத்தக்களரியாக மாறிய பின்னர், நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியும் சர்வதேச நாணய நிதியம், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இந்த ஆண்டு சுமார் 4 பில்லியன் டொலர் உதவியை நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *