
இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தாம் தெரிவித்த கருத்து நீதித்துறைக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கோருவதாக ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்றில் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வு குறித்து அவர் கருத்து வெளியிட்டார்.
இதனை அடுத்து கடந்த ஆண்டு ஜனவரியில், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு அவர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல கோரிக்கைகளை விடுத்த போதிலும் பொதுமன்னிப்பு குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.