
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை உயர்நீதிமன்றால் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான 2ஆவது வழக்கு உயர் நீதிமன்றில் இன்று (07) செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தான் தெரிவித்த கருத்து நீதித்துறைக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கோருவதாக ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி குழாமின் அமைப்பு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார் என அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




