2019 ஆண்டுவரை இருந்த வரிவிதிப்பு முறையை மீள ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் சபையில் தெரிவிப்பு!

2019 ஆம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த வரி விதிப்பு முறைமை இல்லாது செய்யப்பட்டமையாலேயே நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், இதனை மீளவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ” எமக்குத் தேவையான உணவின் பெரும்பான்மையானவற்றை நாம் தேசிய ரீதியாக உற்பத்தி செய்கிறோம். எஞ்சியத் தொகையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.

ஒரு வருடத்திற்கு எமக்கு 2.4 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படுகிறது. ஆனால், 1.6 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியே இப்போது எம்மிடம் காணப்படுகிறது.

அரிசி போன்று மரக்கறிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், அடுத்த சில மாதங்களுக்கு நாம் உணவுத்தட்டுப்பாடுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். தேசிய விவசாயத்தை கட்டியெழுப்ப இரசாயன உறம் தேவைப்படுகிறது.

அத்தோடு, தேயிலை, தென்னை, இறப்பர் பயிர்செய்கைக்காகவும் உறம் தேவைப்படுகிறது. இதற்காக 600 மில்லியன் டொலர் ஒரு வருடத்திற்கு தேவைப்படுகிறது.

இப்போது நாட்டுக்குத் தேவையான மருத்து, மற்றும் மருத்துவப் பொருட்களைக் கொண்டுவர சர்வதேச நாடுகளுடன் நாம் பேச்சு நடத்தியுள்ளோம்.

ரூபாயின் பெறுமதியை பலப்படுத்த 1 பில்லியன் டொலர் தேவைப்படுகிறது. அடுத்த 6 மாதங்களுக்கு நாட்டை கொண்டுசெல்ல 6 பில்லியன் டொலர் தேவைப்படுகிறது.

உக்ரைன் – ரஸ்யா போரினால், அனைத்து நாடுகளின் தேசிய உற்பத்திகளும் அடுத்தாண்டு வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுகிறது.

2024 ஆம் ஆண்டாகும்போதே இதனை மீளவும் சீர்செய்ய முடியும் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. நாமும் இதற்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும்.

2019 ஆம் ஆண்டு, நாம் நடைமுறைப்படுத்திய வரி முறையை இந்த அரசாங்கம் இல்லாது செய்தமையால், 600 – 800 பில்லியன் ரூபாய் இழப்பு அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

எமது பொருளாதாரத்தின் வீழ்ச்சி அங்கு தான் ஆரம்பமானது. எனவே, நாம் மீண்டும் அந்த வரிவிதிப்புக்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைமையில் காணப்படுகிறோம்.

அரசாங்கத்திற்கு வருமானம் வந்தால் மட்டுமே நாட்டை ஸ்தீரப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *