இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம்! – ரணில்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கிலேயே புதிய இடைக்கால வரவு – செலவுத்திட்டம் தயாரிக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாம் நீண்ட கால இலக்குடன் பயணித்தால் 100 ஆவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடும் 2048 ஆம் ஆண்டாகும்போது எமது நாடு வளர்ச்சியடைந்த நாடாகிவிடும்.

இப்போது எமது நாடு பழுதடைந்த கணினியைப் போன்றுள்ளது. இதனை திருத்தியமைக்க வேண்டும்.
இந்த வேளையைத் தான் நாம் இப்போது செய்கிறோம். இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தைக் கொண்டுவந்து இந்த கணினியை ரீ- ஸ்டாட் செய்ய வேண்டும்.

இதற்குப் பிறகு, வைரஸ்கள் நுழையாத வகையில் வைரஸ் காட்களை போட்டுக் கொள்ள வேண்டும். நவீன செயலிகளை தரவிரக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தின் அநாவசிய செலவுகளை நாம் முற்றாக இல்லாது செய்யவுள்ளோம். ஏனைய செலவுகளையும் நாம் மட்டுப்படுத்தவுள்ளோம்.

இதன் ஊடாக வீழ்ச்சியடைந்துள்ள துறைகளை மீண்டும் மேலே கொண்டுவர முடியுமாக இருக்கும்.

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்துவோம். மீண்டும் 3 வேளையும் சாப்பிடக்கூடிய நிலைமையை நாம் ஏற்படுத்துவோம்.

இதுதொடர்பாக அமைச்சரவையிலும் நேற்று விசேட கவனம் செலுத்தினோம். நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பொருளாதார முன்னேற்றம் மட்டும் போதாது.

அரசியல்- சமூக மாற்றமும் தேவைப்படுகிறது. ஊழல்வாதிகள், கொள்ளையர்களுக்கு இங்கு இடமில்லை.

இதற்காக அனைவரும் முன்வர வேண்டும் என நாம் இவ்வேளையில் அழைப்பு விடுக்கிறேன்.
நாடு இன்று முகம் கொடுக்கும் நிலைமைக்கு நாடாளுமன்றில் உள்ள மக்கள் பிரதிநிதிகளாகிய நாம்தான் பொறுப்புக்கூற வேண்டும். எனவே, கட்சி பேதங்கள் கடந்து சிந்திப்போம்.” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *