
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது வரவு செலவுத் திட்டத்தில் 2022ஆம் ஆண்டு முன்மொழிந்த பல அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குவதை வேறுபடுத்துவதற்கு அல்லது முழுமையாக நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமரும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் ரணில் விக்ரமசிங்க, அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மூலதன நிதியை அரசாங்கத்தின் தொடர்ச்சியான செலவுகள் மற்றும் நலன்புரி திட்டங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவையில் முன்மொழிந்து அனுமதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
‘சந்தை ஸ்திரத்தன்மைஇ பொது நலன் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் டொலர் நெருக்கடியைத் தொடர்ந்து மிகவும் அத்தியாவசியமான மற்றும் தவிர்க்க முடியாத அரசாங்க செலவினங்களை வழங்குவதற்கு நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
இதற்காக 2021 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்திற்குப் பதிலாக திருத்தச் சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயற்பாடுகளை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து, அவற்றில் வீண் முறைகேடுகள் அல்லது தேவையற்ற செலவுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.




