கட்டுரையாளர்- கோவை
கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு, மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்ட திரு.இமானுவேல் மக்ரோன் தற்போது மற்றொரு தேர்தல் சவாலை எதிர் கொள்கிறார். இம்மாதம் (June) 12 மற்றும் 19 ஆம் தேதி திகதிகளில் வழமைபோல இரண்டு சுற்றுக்களாக நடைபெறவுள்ள அந்த நாட்டின் பாராளுமன்ற தேர்தல்களில் மீண்டும் அவரது கட்சி பெரும்பான்மையைப் பெற்று அவரது ஆட்சியை கடந்த முறையை போன்று முழுமை ஆக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் களம் கண்டுள்ள கட்சிகளில் மையவாதக் கட்சியாக முன்னிறுத்தப்படும் அவரது “முன்னோக்கிய குடியரசு” (La République en Marche) கட்சியை உள்ளடக்கிய “வலதும் மையமும் இணைந்த ஒன்றியம்” Union de la droite et du Centre என்னும் கூட்டு, மற்றும் தீவிர வலதுசாரியக் கட்சியான மரைன் லு பென்(Marine Le Pen) அவர்களின் .”தேசிய பேரணி” (National Rally) ஆகியனவே முன்னணி பெறும் என பொதுவாக எதிர்பார்க்கப் பட்டாலும், இந்த இரண்டு கட்சிகளும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையே பெறும் என வெளியாகிய கருத்துகணிப்பொன்று பிரான்ஸ் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்சின் முக்கிய கருத்து கணிப்பு நிறுவனங்களில் ஒன்றான IFOP (Institut français d’opinion publique) கடந்த வாரம் நடாத்திய கணிப்பொன்றிலேயே புதிதாக உருவாக்கப்பட்ட, jean Luc Melenchon தலைமைலான இடதுசாரிகளின் பரந்த கூட்டணியான “சுற்றுச் சூழல்,சமூக ஒன்றியம்” (l’Union Populaire Ecologique et Siciale),தேர்தலின் முதல் சுற்றில் 28% வாக்குகளைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி, அந்தக் கூட்டமைப்புக்கே நாடாள மன்றத்தின் கூடுதல் ஆசனங்களை பெறும் வாய்ப்புள்ளதாக அறிவிகப் பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் சவால் வேட்பாளராக இருந்து 21,95 வீதமான வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றவர் jean Luc Melenchon என்பதும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மக்ரோன், இரண்டாவது இடத்தைப் பெற்ற மரைன் லு பென் ஆகியோரினதும் அவர்களது கட்சியினதும் மக்கள் ஆதரவு தேர்தலுக்கு பின்னர் குறைவடைந்து வருவதும் குறிப்பிடத் தக்கது.
பிரான்ஸ் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக்கட்சிகள் உட்பட்ட 16கட்சிகள், அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் என்பவற்றுடன் பாரிய கூட்டணி அமைத்து சமூக ஒன்றியமாக களம் காணுகின்றார் Melonchan. முன்னாள் சோசலிஸ்ட் கட்சி முக்கியஸ்தரான இவர் இன்றைய பிரான்சின் இடதுசாரிகளில் மிகவும் பிரபல்யமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
IFOP அமைப்பின் கருத்துக்கணிப்பு மெய்ப்பிக்கப் பட்டு, சமூக ஒன்றியம் பாராளமன்றத்தின் 577ஆசான்களில் கூடுதலானவ்றில் வெற்றி பெற்றால் அதன் பிரதிநிதி ஒருவரை பிரதமராக நியமித்து அவரின் ஒப்புதலுடன் மந்திரிசபையை தெரிவு செய்து, அவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயம் ஜனாதிபதிக்கு ஏற்படும்.
இந்த நிலையில் தமது கூட்டணி வெற்றி பெற்றால் தானே பிரதமராவேன் என ஏனைய கூட்டு கட்சிகளின் சம்மதத்துடன் அறிவித்திருக்கும் Melenchon பிரதமரானால், பிரான்ஸ் அரசியலில் ஒரு குழப்ப நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஜனாதிபதியும் பாராளமன்றத்தில் ஆளுமை செலுத்தும் குழுவும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் ஜனாதிபதி தனது நிகழ்ச்சி நிரலை நடைமுறைப் படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்படும்.
எடுத்துக்காட்டாக, ஓய்வுபெறும் வயதை தற்போதைய 62லிருந்து 65 ஆக அதிகரிப்பதன் மூலம் பிரான்சின் ஓய்வூதிய முறையை மாற்றியமைக்க வேண்டும் என்கிற மக்ரோனின் திட்டம் போன்ற பல வலதுசாரிய அடிப்படை வாத திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடியாமல் கிடப்பிற்கு போகலாம்.
இது போன்ற ஒரு அரசியல் நெருக்கடி நிலைமை முன்னாள் ஜனாதிபதிகளான திருவாளர்கள் பிரான்சுவா மித்திரன் (Francois Mitterrand ), ஜக் சிறாக் (Jacques Chirac ) ஆகியோர் காலங்களிலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“தேர்தல் முடிவுகள் எப்படியாக அமைந்தாலும் மக்ரோன் ஜனாதிபதிக்கான ஆளுமை குறியீட்டை முன்னிறித்திய செயல்முறைகளிலேயே முடிந்தவரை செல்வாக்கை செலுத்த முயற்சிப்பார்” என்று தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார் பிரான்சின் வரலாற்றுப் பேராசிரியரான இம்மானுவேல் ட்ராய்ட் அவர்கள். பாரம்பரிய வரலாறுகளைக் கொண்ட பிரான்ஸ் இடதுசாரிய சிந்தனையாளர்களைக் கொண்ட அரசாங்கத்தின் மத்தியில்,மையவாத சாயலுடன் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி மக்ரோனின் வலதுசாரிய சிந்தனா வெளிப்பாடுகள் எடுபடுமா…? என்பது கேள்விக்குறியே.
பாரளமன்ற தேர்தலின் முதல் சுற்றில் சமூக ஒன்றியத்திற்கு பெரும்பான்மை கிடைத்தாலும் அது ஆட்சி மாற்றத்திற்கு உத்தரவாதம் அளிக்காது எனவும் ஆய்வாளர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஏப்ரலில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் Marine Le Pen மற்றும் Melenchon இருவரும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்க,பிரான்சின் பாரம்பரிய இடது சாரிய கட்சிகளான சோசலிஸ்ட் கட்சி மற்றும் கொம்யூனிஸ்ட் கட்சிகள் முறையே 5%,1% வாக்குகளையே பெற்று படுதோல்வி அடைந்ததை சுட்டிக் காட்டும் அந்த ஆய்வாளர்கள், Melenchon இற்கு கிடைத்த வாக்குகள் அவர் ஓர் தீவிர இடதுசாரி என்பதை விட அவரது ஜனரஞ்சகத்திற்காகவே கிடைத்தது என்கின்றனர். தற்போது பிரெஞ்சு இடதுசாரிகளுக்கு ஆதரவு பெருகியதாகத் தோன்றினாலும், கருத்துக் கணிப்பாளர்கள் எவரும் அதற்கான நாடாளுமன்றப் பெரும்பான்மையை உறுதியாக கணிக்கவில்லை.
இந்த நிலையில் பிரான்சின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் தீவிர மாற்றத்திற்கான உறுதிகள் பலவற்றை வழங்கி, வருங்கால பிரதம மந்திரி என்று தன்னை முன்னிலைப் படுத்துவதில் மெலன்சோன் சோர்வடையாமல் செயல்படுகிறார்.பிரான்ஸுக்கும் ஐரோப்பிய ஒன்றித்திற்கும் இடையேயான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை ஆதரிக்காத அவர் ஃபிராங்கோ- ஜெர்மன் கூட்டு உறவு முற்றிலும் காலாவதியான ஒன்று எனக் கருத்து வெளியிடுகிறார். ஜனாதிபதி மக்ரோன் தீவிரமாக ஆதரிக்கும் ஜேர்மனியுடனான பிரான்சின் பாரம்பரிய நெருங்கிய உறவை அவர் ஆதரிக்கவில்லை. கிழக்கு ஐரோப்பிய நாட்டு மக்களின் பாரிய குடிபெயர்வு, அதனால் ஏற்படும் சமூக அவலங்கள்,பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றை விரும்பாத பிரான்சின் பெரும்பான்மையான மக்களின் ஐரோப்பிய ஒன்றிய இறுக்கத்துக்கு எதிரான கருத்தை அவர் ஆதரிக்கிறார்.
அதே வேளை கடந்த தேர்தலில் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்ரோனின் முதல் விஜயம் ஜேர்மன் அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸை Olaf Scholz சந்திப்பதற்கான பெர்லினுக்கானதாக அமைந்திருந்ததும் அப்போது இரு தலைவர்களும் ஐரோப்பிய ஒன்றிய இறுக்கம் தொடர்பில் கலந்துரையாடி இருந்தமையும் குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில் இடம்பெற இருக்கும் தேர்தலில் இடதுசாரரிகளின் கூட்ட்மைபான சமூக ஒன்றியம் கூடுதலான ஆசனங்களில் வெற்றி பெற்று Jean Luc Melenchon பிரதமரானால் ஒய்வூதிய திட்டம் போன்ற ஒருசிலவற்றில் மக்களின் விருப்பு நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டாலும் அரச இயந்திர ஓட்டம் கரடு முரடானதாகவே அமையும்.
மறுபுறம், மக்ரோனின் இரண்டாவது பதவிக்காலத்தின் போது அவருக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் நாட்டின் தெருக்களில் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.மஞ்சள் அங்கி போராடங்கள்,எரிபொருள் வரி உயர்வுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கம், என்பன மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு முழுமையான கிளர்ச்சியாக உருவெடுத்திருந்தது நினைவு கூரப்படவேண்டியதே. அனைத்தினதும் திடம் இம்மாதம் 19ம் திகதியின் பின்னரே உறுதியாகும்

