
கொழும்பு, ஜுன் 08
கொழும்பு வணிக மேல் நீதிமன்றின் கட்டளை சேவகர் (பிஸ்கல்) பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சு அவரை பணி இடை நிறுத்தம் செய்து அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஏரோபுளொட் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றை இலங்கையிலிருந்த வெளியேற விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை ( பின்னர் நீக்கப்பட்டது), விமான கட்டுப்பாட்டு மையத்துக்குள் அத்துமீறி பலாத்காரமாக கையளித்ததாக கூறப்படும் சம்பவத்தை மையப்படுத்தி, அவர் இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த விடயத்தில் அவருடன் சேர்ந்து தடை உத்தரவை எடுத்து சென்றதாக கூறப்படும், மனுதாரர் தரப்பின் சட்டத்தரணிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகளை பிரதம நீதியரசருக்கு நீதி அமைச்சு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக, நீதி அமைச்சரின் இணைப்புச் செயலர் சட்டத்தரணி தசுன் நாகஸ்ஹேன குறிப்பிட்டார்.
முன்னதாக குறித்த விமானத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்கக் கோரி சட்ட மா அதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் வாதங்களின்போது மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் சுமதி தர்மவர்த்தன குறித்த பிஸ்காவுக்கு எதிராகவும், சட்டத்தரணிக்கு எதிராகவும் நீதிமன்றில் குற்றம் சுமத்தியிருந்தார். அத்துடன் வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்கவும் சட்டத்தரணியின் செயற்பாடு குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
‘ மனுதாரர் தரப்பில் நீதிமன்றில் ஆஜராகும் சட்டத்தரணி அருண டி சில்வா நீதிமன்ற கட்டளை சேவகருடன் (பிஸ்கால்) கட்டுநாயக்க அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள விமான பயண கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று ரஷ்ய விமானம் வெளியேறுவதை தடுத்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது எப்படி ?
நீதிமன்றம் எனது சேவை பெறுநரான விமான பயண கட்டுப்பாட்டாளருக்கு எந்த தடை உத்தரவுகளையும் பிறப்பிக்காத நிலையில் சட்டத்தரணி ஒருவரும் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவரும் இவ்வாறு நடந்து கொண்டமையின் பின்னணி என்ன?
இது தொடர்பில் இந்த நீதிமன்றம் தனது கவனத்தை செலுத்த வேண்டும்.’ என தெரிவித்து சட்டத்தரணியும் நீதிமன்ற உத்தியோகத்தரும் விமான பயண கட்டுப்பாட்டு மையத்துக்கு செல்வதை உறுதிப்படுத்தும் 14 புகைப்படங்கள் அடங்கிய இறுவெட்டு ஒன்றை மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் சுமதி தர்மவர்த்தன நீதிமன்றில் கையளித்திருந்தார்.
இதன்போது மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையாயின் அந்நடவடிக்கைகள் ஊடாக தமது நீதிமன்ற அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கருத வேண்டி உள்ளது என நீதிபதி ஹர்ஷ சேதுங்க திறந்த நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மனுதாரர் தரப்பான அயர்லாந்து நிறுவனம் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிக்கு தனது அதிருப்தியை நீதிபதி வெளிப்படுத்தியதுடன் . சட்டத்தரணி ஒருவருக்கு இவ்வாறு நடந்துகொள்ள முடியாது என நீதிபதி இதன்போது குறிப்பிட்டார் . சட்டத்தரணி பாரிய தவறு ஒன்றை புரிந்துள்ளதாகவும் அந்த விடயத்தை கண்டு கொள்ளாமல் இருக்க நீதிமன்றால் முடியாது எனவும் நீதிபதி இதன்போது குறிப்பிட்டிருந்தார்.