பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு இல்லை: இரு தொழிற்சங்கங்கள் தெரிவிப்பு

கொழும்பு,ஜுன் 08

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் இன்று நள்ளிரவில் ஆரம்பிக்கவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர் சங்கம் மற்றும் சுயாதீன பொறியியலாளர் சங்கம் ஆகியன தெரிவிக்கின்றன.

இதேவேளை, மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

பல தொழிற்சங்கங்கள் இன்று(08) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன.

மின்சார சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் இன்று நள்ளிரவு முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.

பணிப்புறக்கணிப்பு காரணமாக நாளை காலை 8 மணிவரை நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படும் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் மற்றும் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அத்தியட்சகர்கள் சங்கம் உத்தேச வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தெரிவிக்கின்றன.

நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் தேசிய மின் கட்டமைப்பை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 வருடங்களின் பின்னர்தான் மின் பொறியியலாளர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் இவ்வாறானதொரு வேலைநிறுத்தத்திற்கு தயாராகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *