உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள்- மக்களிடம் முதல்வர் கோரிக்கை

உங்களுக்காக எந்நாளும் உழைப்போம். ஆகவே  எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள் எனவும் அவர் கோரியுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சட்டப்பேரவைத் தேர்தலில் நல்லாட்சி மலர வேண்டும் என தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தீர்கள்.

அதேபோன்று உள்ளூராட்சியிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் வாக்குகளை வழங்கினீர்கள். உங்களால் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை நாள்தோறும் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

தேர்தலுக்கு முன்பாக என்னென்ன வாக்குறுதிகளைத் தந்தோமோ, அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது என்னிடம் நீங்கள் அளித்த மனுக்களில் பெரும்பான்மையானவற்றுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் செய்திருக்கிறோம் என்பதைத் தலைநிமிர்ந்து சொல்ல ஆசைப்படுகிறேன். ஆட்சிக்கு வந்த நான்கே மாதத்தில் இதைச் செய்து கொடுத்திருக்கிறோம் என்பதுதான் தி.மு.க.வின் தனித்தன்மை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply