
பொருளாதார ரீதியில் தான் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஆர்வமாக இருந்தால், அதில் இணைந்து செயற்பட முடியும் என சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நேற்று அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
21வது திருத்தம் போன்ற விடயங்கள் எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் ஓயவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், இந்தப் போராட்டம் மீண்டும் மிகவும் ஆபத்தான முறையில் கொண்டுவரப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிலர் அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்றும் எனவே அதற்கு நாம் தயாராக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் உள்ள சில விடயங்களில் தமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் தாம் அதில் தலையிடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.