சிறப்புரிமையை பயன்படுத்தி நாட்டை எரியூட்ட வேண்டாம்! கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை

வன்முறை அரசியலில் இருந்து விலகுவதற்கு இன்னும் அரசியல்வாதிகள் தயாராக இல்லை என்று கத்தோலிக்க சபை குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன் மீண்டும் நாட்டில் இன மற்றும் மதங்களுக்கு இடையில் மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் கத்தோலிக்க திருச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் வணக்கத்துக்குரிய தந்தை சிறில் காமினி இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தமது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

கடந்த மே 9ஆம் திகதி ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள், கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் சோபித்த தேரர் ஆகியோரின் துாண்டப்பட்டன என்று நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தநிலையில் அமைச்சரின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த சிறில் காமினி, மே மாதம் 9ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறைகளுக்கு மூலக்காரணமாக காலிமுகத்திடல் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அமைந்திருந்தன என்று குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறப்போவதாக புலனாய்வாளர்களுக்கு தெரிந்திருக்கவில்லையா? அல்லது அவர்கள் தகவல் வழங்கியும் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லையா? என்று சிறில் காமினி கேள்வி எழுப்பினார்.

இந்த வன்முறைகள் இடம்பெற்ற ஒரு மாதமாகியும், வன்முறைகளுக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டது யார் என்பதை பொலிஸார் கண்டறியவில்லை.

எனவே அறியாத விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடவேண்டாம் என்று அருட் தந்தை சிறில் காமினி, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் தேவையற்ற கருத்துக்களை கூறி நாட்டை மீண்டும் எரியூட்டாமல், பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களின் விசாரணைகளுக்கு இடமளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *