முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால செயற்பாடு குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கபெறவில்லை என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு இன்று நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியது.
2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொதுகூட்டம் ஒன்றின் போது, தமிழீழ விடுதலைப்புலிகள் மீள கட்டியெழுப்பபட வேண்டும் என்ற வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பான முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்சன கெக்குனுவெல முன்னிலையில் ஆராயப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நீதிமன்றில் முன்னிலையானார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றத்திடம் தெரியப்படுத்தியது.
எவ்வாறாயினும், சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கபெறவில்லை என அவர்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பனங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்சன கெக்குனவெல, வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி மீள அழைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.
பிற செய்திகள்