
கொழும்பு, ஜூன் 11: அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தின் போது கல்வி அமைச்சின் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டமை தொடர்பாக தலங்கம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கடுவெல நீதவான் நீதிமன்றுக்கு இன்று சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.
‘இசுருபாய’ கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவர்கள் பிரதான வாயிலை உடைத்து, கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்களை நோக்கிக் கற்களை வீசியதில், ஒரு அதிகாரி காயமடைந்த நிலையில் நாரஹேன்பிட்டி காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கல்வி அமைச்சுக்கு அருகில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் தமது கோரிக்கையை எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ தெரியப்படுத்தவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சில் எந்தவொரு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் கலந்துரையாடி தீர்க்க கல்வி அமைச்சு தயாராக இருப்பதாக அது சுட்டிக்காட்டுகிறது.
கல்வி அமைச்சுக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.