மலையகத்தில் வேலையற்ற இளைஞர்களுக்கு மரவள்ளிச் செய்கை!

எப்போதாவது ஏற்படும் தேசிய உணவு நெருக்கடிக்கடிணியின்போது மாத்திரம் பெருந்தோட்டக் காணி பயன்பாடு குறித்துப் பேசாது, எப்போதுமே பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் குறித்தும், காலங்காலமாக நிலவிவரும் பெருந்தோட்ட மக்களின் காணி விவகாரம் குறித்தும் உறுதியான தீர்மானம் ஒன்று அவசியம்.

இவ்வாறு முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

பயிரிடப்படாத நிலங்களில் உணவு உற்பத்திகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற, ஜனாதிபதியின் அறிவிப்பை அடுத்து, அத் திட்டத்தை சாத்தியமான முறையில் நடைமுறைப்படுத்ததுவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பது தொடர்பிலும், நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்பட்டுள்ள பாரபட்சம் தொடர்பில் நியாயமான தீர்வு காண்பது தொடர்பிலும், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான, தினேஷ் குணவர்தனவை மலையக அரசியல் அரங்கப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.

இச் சந்திப்பு வியாழன் (9) அன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தற்போதைய நிலையை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படாது , மலையக மக்களை எப்போழுதும் கவனத்தில் கொண்டு செயற்படுங்கள் . இது தற்காலிக தீர்மானமாக அமைய கூடாது.

1972-1977 பஞ்ச காலப்பகுதிகளில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டது . ஆங்காங்கே மக்கள் மரவள்ளிச் செய்கையில் ஈடுபட்டதன் வரலாறுகள் மலையகத்தில் உண்டு. ஆனாலும் அந்த காணிகள் மக்களுக்கு நிரந்தரமாக்கப்படவோ, மாற்றுவாழ்வாதார வழிகளோ நிரந்தரமாகச் செய்யப்படவில்லை.

மாறாக அரச காணிகள் மீண்டும் 1992ல் தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு மக்கள் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுள்ளனர்.

மலையகப் பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை நீண்டகாலமாக பேசப்பட்டுவருகின்றது.

மலையகத்திலும் சிறுதோட்ட உடமையாளர் முறைமை அறிமுகம் செய்யப்படுதல் வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

இப்போதைய அறிவிப்பினைத் தொடர்ந்து மலையகப் பகுதிகளில் இளைஞர்கள் இந்தத் திட்டத்துக்கு தயாராகிவிட்டனர்.

எனவே பயிரிடப்படாத காணிகளை அங்கே வேலைவாய்ப்புகள் இன்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு முறையான வகையில், ஒப்பந்த அடிப்படையில் பகிர்தளித்து, அந்த மண்வளத்தையும் மனித வளத்தையும் முறையாகப் பயன்படுத்துவது அவசியம்.

பெருந்தோட்டக் கம்பனிகளுடன், தோட்டப் பகுதி இளைஞர், யுவதிகளுடன், பகையை ஏற்படுத்தும் திட்டமாக ஜனாதிபதியின் அறிவிப்பை மாற்றிக்கொள்ளாது.

அரசாங்கம் ஒழுங்கு முறையான மாவட்ட செயலக, பிரதேச செயலக, கிராம உத்தியோகத்தர் அதிகாரங்கள் ஊடாக பரமப்பரை பரம்பரையாக தோட்டங்களில் வாழும், இளைஞர், யுவதிகளை இந்தந்திட்டத்தில் உள்வாங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைக்கின்றோம் .

இது குறித்து அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் , உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மட்டத்தில் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும், அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார் .

இச்சந்திப்பில் மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நா.கிருஷ்ணகுமார், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணரத்ன, ஆகியோரும் கலந்தகொண்டிருந்தனர்.

பிற செய்திகள்

இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு

சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி

ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்

கொவிட் விதிமுறைகளை  தளர்த்தும் அமெரிக்கா!

உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *