மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் அம்பலம்!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக மின் விநியோக தடையும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தயாராகிய வேளை நாட்டில் தொடர் மின்வெட்டு அமுல் படுத்தப்படகூடுமோ என மக்கள் அஞ்சி இருந்த நிலையில் குறித்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மின்தடையினை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பல குழுக்கள் திட்டமிட்டு செயற்படுவதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மின்சார உற்பத்தியில் தடங்கல் ஏற்படுத்தும் வகையில் விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து முறைகேடாக நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நாசகார செயற்பாட்டின் மூலம் மின் உற்பத்தி இயந்திரங்களுக்குள் செலுத்தப்படாத நிலையில் சுமார் இரண்டு மணிநேரம் நீர் வெளியேற்றப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த செயற்பாடானது நீர்மின் உற்பத்தியின் செயற்பாட்டை துண்டித்து மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் நாசகார நடவடிக்கை என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை குறித்த நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதாயின் அதற்கான செயலகத்தின் அனுமதி முன்கூட்டியே பெறப்பட வேண்டும் என்பது நடைமுறை ஆனால் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்வெளியேற்றப்பட்டபோது அவ்வாறான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என கூறப்படுகிறது.

அதேவேளை மின்சார உற்பத்தியில் தடங்கல் ஏற்படுத்தும் வகையில் குழப்பவாதிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

மறுபுறம் முறைகேடாக நீர் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் தற்போது இரண்டு பொலிஸ் குழுக்கள் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை குறித்த நீர்த்தேக்கங்களை பார்வையிட்டு அதன் பின்னர் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குள் தவிக்கும் மக்களை இவ்வாறான நாசகார செயற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக மேலும் பாதிக்கப்படும் நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்படுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *