
நாட்டின் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பௌத்த சிங்கள பேரினவாதம் தொடர்கிறது. புத்தர் பெருமானின் சிலையை குருந்தூர்மலையில் பிரதிஷ்டை செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அனுமதிக்காது தமிழ் தேசிய கட்சிகள் மனசாட்சியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை எதிர்நோக்கி இருக்கும் மிக பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பௌத்த சிங்கள பேரினவாதம் தனது நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் தீவிரமாக இருக்கிறது என்பதனை குருந்தூர்மலையில் புத்தர் பெருமானின் சிலையை பிரதிஷ்டை செய்து வைபவம் ஒன்றினை நடாத்துவதில் காட்டப்படுகின்ற ஏற்பாடுகள் மற்றும் முனைப்புக்கள் திட்டவட்டமாக எடுத்துக்காட்டுகின்றன.
தமிழ் மக்கள் இந்த விடயத்தில் ஒரு தெளிவான செய்தியை பௌத்த சிங்கள பேரினவாதம் கூறிக்கொண்டு இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கு மேலதிகமாக புதிதாக தேசியம் பேசுவதிலே அக்கறை காட்டுகின்ற தமிழ் தேசியவாதிகள் அதாவது தமிழ் தேசியவாதத்தினைக் கடந்து முழு இலங்கையும் தழுவிய தேசியத்தை பேசத்தொடங்கி இருக்கிற தமிழ் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் இனியாவது மனசாட்சியுடன் செயல்பட முன்வர வேண்டும்.
சிங்கள இனத்தவர் ஒரு போதும் மாற மாட்டார்கள், எனவே இந்த உண்மையினை மீண்டும் மீண்டும் தமிழ் மக்களுக்கு நடைமுறை ரீதியில் கூறிக்கொண்டிருக்கிற சூழ்நிலையிலும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிங்கள, பௌத்த தேசியவாதத்தை மிக குறைவாக எடை போடுவது என்பது பரிதாபகரமானது.
ஆகவே தமிழ் மக்கள் கையாளுகின்ற பிரச்சனைகளை பொறுத்த மட்டத்திலே தெளிவாக எமக்கான எமது தாயகத்தில் பூரண அதிகாரம் கொண்ட ஓர் அரசியல், நிர்வாக கட்டமைப்பு சுயாட்சி கோட்பாட்டின் அடிப்படையில் ஸ்தாபிக்காத நிலையில் தொடரும். எனவே இதனை நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.
ஆகவே உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை தமிழ் தேசிய கட்சிகள் சிந்திக்க வேண்டும், உருப்படியான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? என மனசாட்சியுடன் சிந்திக்க முன்வர வேண்டும். என்றார்.
பிற செய்திகள்