நாட்டில் உணவுப் பஞ்சம்,உணவுப் பேரிடர் – பேராசிரியர் வெளியிட்ட முக்கிய தகவல்

நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் , உணவுப் பஞ்சம் ஏற்படப் போகிறது என்ற கருத்து தொடர்பில்
யாழ்ப்பாண பல்கலைக் கழக விவசாய உயிரியல் துறைப் பேராசிரியர் கு.மிகுந்தன் ,சமூகம் மீடியாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்:

கேள்வி:நாட்டில் பஞ்சம் ஏற்படும் என்ற கருத்து தொடர்பில் ?

பதில் :முதலில் எமது நாட்டின் உணவு உற்பத்தியை நாம் பார்க்க வேண்டும்.இரண்டு போகங்களுக்கு தேவையான உரம் எதுவும் கிடைக்கவில்லை.இதனால் பயிர் நடுகை செய்யும் போதும், தேவையான உரம் இல்லை,அதே போன்று ஏற்கனவே நடப்பட்ட பயிர்கள் அறுவடைக்கு தயாராகும் போகும் உரங்கள் இல்லை.ஆகவே இந்த பாதிப்பு நெற்பயிர்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு காரணம் நாட்டில் அமுலில் காணப்பட்ட உரத்தடையாகும்.ஆகவே தான் பஞ்சம் பற்றிய எதிர்வு கூறலை நாம் கருத்திலே கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கேள்வி:வெளிநாட்டிலிருந்து அரசி இறக்குமதி தொடர்பில் ?

பதில்:எமது நாட்டில் நெல் உற்பத்தியில் ,ஒரு வருடத்தில் தன்னிறைவு அடைந்த நிலைக்கு வந்தது.
அதன் அடிப்படையில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் தருவாயிலில் இருந்தோம்.ஆனால் அதை நாம் இழந்துவிட்டோம்.நூறு வீதம் தன்னிறைவை அடையா விட்டாலும் 70 வீதமாவது அடைந்திருப்போம்.

எப்போது நாம் பாரம்பரிய பயிர் இனங்களை நாம் கைவிட்டோமோ அப்போது தான் மாறுபட்ட பிரச்சினைகள் வந்தது.எமது பாரம்பரிய பயிர்களுக்கு ,சாதாரண இடு பொருட்களே போதுமானது.மாறாக கலப்பு பயிர்களை உற்பத்தியை பெருக்குவதற்காக நாம் கொண்டு வந்த போது ,மாறுபட்ட இடு பொருட்கள் எமக்கு தேவைப்பட்டது.அதாவது இரசாயன உரம் போன்றவை எமக்கு தேவைப்பட்டது.அவை இல்லை என்ற நிலையில் எமது உற்பத்திகள் கேள்விக்குறியாகியுள்ளன.

அன்று அனைவரினதும் வீட்டிலும் மரவள்ளி காணப்பட்டது.ஆனால் நாம் இன்று என்ன செய்கின்றோம்.தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகளை சொல்லிக்கொண்டே ,ஒரு பயிரையும் நடுகை செய்யாமல் இருக்கின்றோம்.செயன் முறையில் ஒன்றையும் காட்டவில்லை.எமக்குரிய உணவை நாம் வாங்குவதை நினைத்துப் பார்க்கின்றோம் ,உற்பத்தி செய்ய நினைக்கவில்லை.கொரோனா நல்ல பாடத்தை சொல்லி தந்தது.அதைக் கூட நாம் மறந்து விட்டோம்.

கேள்வி :இவ்வாறான நடவடிக்கைகளை யார் யார் செய்ய வேண்டும்?

பதில் :இந்தப் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு.திடீர் என்று இயற்கை விவசாயம்,உரம் தடை என்றால் அது சாதகமாகாது.இதை முதலில் அரசு பொறுப்பேற்க வேண்டும்.ஏற்கனவே உணவுப் விழுக்காடு வந்து விட்டது.சில வருடங்களில் இந்தப் பிரச்சினை தீராது.நாட்டின் பொருளாதாரம் மீள்வதற்கு 5,10 வருடங்கள் கூட ஆகலாம்.அதைக் கூட சரியாக கணித்து சொல்ல முடியாத நிலை.இப்போது நாம் பேரிடரில் உள்ளோம்.சுனாமி மட்டும் பேரிடர் இல்லை.உணவுப் பேரிடர் வரப்போகிறது.ஊட்டச் சத்து அற்ற பிள்ளைகளை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றோம்.உணவு சாதாரண விலையில் கிடைக்கும் போது அனைவரும் வாங்கி உட்கொண்டார்கள்.இன்று நிலை அவ்வாறு இல்லை.ஆகவே நாமும் எமது உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். இதை விரைந்து மேற்கொள்ள வேண்டும்
என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *