புத்தளத்தில் பிரதான மற்றும் உள்வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட புத்தளம் நகரம், புத்தளம் – மன்னார் வீதி, தில்லையடி, ரத்மல்யாய, பாலாவி, நாகவில்லு மற்றும் மதுரங்குளி ஆகிய பகுதிகளில் இவ்வாறு கட்டாக்காலி மாடுகளின் தொல்லைகள் அதிகளவில் காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மேற்படி பகுதிகளிலுள்ள வீதிகளில் மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக அழைந்து திரிவதுடன், வீதியின் நடுவே கூட்டமாக தரித்து நிற்பதுடன், படுத்துறங்குவதாகவும் வாகன சாரதிகளும், மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், அடிக்கடி வீதி விபத்துக்களும், உயிரிழப்புச் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த விடயத்தில் புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் பிரதேச சபை தவிசாளர்கள் உடனடியாக தலையிட்டு, கட்டாக்காலிகளாக சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அத்துடன், குறித்த கட்டாக்காலி மாடுகளால் வீதியில் ஏற்படும் விபத்துக்களின் போது, உயிரிழக்கும் அல்லது காயங்களுக்கு உள்ளானார்களுக்கு அந்த மாடுகளின் உரிமையாளர்கறிடமிருந்தே நஷ்டஈடுகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
