பதுக்கப்பட்ட 600 சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு!

நுவரெலியா பாவனையாளர் அதிகார சபைக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பதுக்கப்பட்ட 600 சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் எஸ்.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பகுதியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினைத் தொடர்ந்து நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் குறைந்த வருமானத்தை பெறும் பெருந்தோட்ட மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு சுமைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

மலையக நகரங்களில் உள்ள ஒருசில வர்த்தகர்கள் இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தினை சாதகமாகப் பயன்படுத்தி பொருட்களைப் பதுக்கி கொள்ளை விலையில் விற்று அதிக இலாப மீட்ட நினைக்கின்றனர்.

இவ்வாறான பொருளாதார நெருக்கடியில் மக்கள் வாழ்வதற்குத் திணறிக்கொண்டு இருக்கும் போது இலாப மீட்ட முயற்சிப்பது மிகவும் கீழ்த்தரமான விடயம். இது இலாப மீட்டும் சந்தர்ப்பம் அல்ல.

எனவே நாங்கள் கடந்தவாரம் இந்த பொருட்களைப் பதுக்கும் வர்த்தகருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையொன்றை முன்னெடுக்குமாறு நுவரெலியா நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தோம்.

அதற்கமைய ஹட்டன் – டயகம, அக்கரப்பத்தனை உள்ளிட்ட ஒருசில பிரதான நகரங்களிலிருந்து 600 க்கும் மேற்பட்ட வீட்டுச் சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதில் ஒருசில கொள்கலன்களை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விற்பனை செய்து வெற்று கொள்கலன்கள் உரிய வர்த்தகரிடம் ஒப்படைக்கப்பட்டன.

விற்கப்பட்ட பணத்தினை அரசாங்க கணக்கில் வைப்பில் இட்டதுடன், இன்னும் ஒருசில கொள்கலன்களைக் கைப்பற்றப்பட்ட போதே பொதுமக்களிடம் உரிய விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இன்று மலையகப்பகுதியில் ஒருசில வர்த்தக நிலையங்களில் பழைய விலைகளுக்குப் பெற்றுக்கொண்ட நுகர்வு பண்டங்களை அதன் புதிய விலைக்கு மாற்றப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

ஒருசில டின்மீன்களின் விலை மாற்றப்பட்டு சுமார் 200, 300 ரூபா அதிகமாக வைத்து விற்கப்படுகின்றன. இவ்வாறான பொருட்கள் இன்று நுகர்வோர் அதிகார சபையினால் மீட்கப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில பொருட்களின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று எண்ணி அரிசி, சீனி , மா , பால்மா, டின்மீன் உள்ளிட்ட பல உணவுப்பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான செயலாகும்.

மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மேலும் மேலும் துன்புறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. வர்த்தகர்களும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இன்று அவர்கள் வர்த்தகம் செய்வது இந்த மக்களை நம்பியே. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய நேரத்தில் உதவி செய்யாது கொள்ளை இலாபம் ஈட்டுவது செய்வதற்குரிய செயலல்ல.

ஆகவே உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் மக்களுக்கு இந்த நேரத்தில் பொருட்களைப் பதுக்காது நியாய விலையில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் அவர்களிடம் பணிவாக வேண்டுகிறேன்.

இதற்கு மேலும் அவர்கள் இவ்வாறு அதிகவிலைக்கு விற்பனை செய்வார்கள். ஆனால் அது தொடர்பாக நுவரெலியா நுகர்வோர் அதிகார சபைக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *