
கொழும்பு,ஜுன் 12
அரசியலமைப்பின் 21வது திருத்தம் ஜூலை மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தின் அதிருப்திக்கு இலங்கை ஆளாக நேரிடும் என்றார்.
தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் இந்த திருத்தம் நிறைவேற்றப்படுவதை தாம் விரும்பவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சில அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
உத்தேச திருத்தங்கள் எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஜூலை மாதத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை ஒத்திவைப்பதன் மூலம் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி மோசமடையும் என தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த போது, நாட்டின் பிரச்சினைகளுக்கு ஒரு தனிநபரால் தீர்வை வழங்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களைச் சூழ்ந்துள்ள தனிநபர்கள் எடுத்த முடிவுகளின் விளைவாகவே தற்போதைய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க, தேசிய இறையாண்மையை மோசமாகப் பிரதிபலிக்கும் வகையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று பலவந்தமாக கைத்தொழில்களுக்கு பிரவேசிக்க முடியாது என்றார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி தனது கருத்துக்களை எப்போதும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.