
வர்த்தகர் தம்மிக்க பெரேராவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்கின்றமை மற்றும் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பலமில்லாத நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தாமே நியமித்ததை கருத்திற்கொண்டு, தம்மிக்க பெரேராவின் நியமனம் தொடர்பில் கோட்டாபய, ரணிலுடன் கலந்தாலோசிக்கவில்லை என்றே கருதப்படுவதாக ஊடகம் ஒன்று கூறுகிறது.
அத்துடன் அவருக்கு அமைச்சு பதவியை வழங்கும் யோசனை தொடர்பிலும், கோட்டாபய, ரணிலுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
சூதாட்ட வர்த்தகத்துடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படுவதை, தனியார்துறையினரும் விரும்பமாட்டார்கள் என்று அந்த தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தநிலையில் அவருக்கு முதலீட்டு ஊக்குவிப்புத்துறையை வழங்குவதன் மூலம், நிதியமைச்சராக இருக்கும் ரணிலின் அதிகாரத்தை குறைக்க, பசிலும் கோட்டாவும் முனைகிறார்களா? என்ற சந்தேகத்தையும் ஐக்கிய தேசியக்கட்சி தரப்பினர் எழுப்பியுள்ளனர்.
இந்த நியமனம், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தினால், அது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையென்பதை சர்வதேசத்துக்கும் வழங்கக்கூடும்.
எனவே இது விரும்பத்தகாத தீர்மானம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தரப்புகள் குறிப்பிட்டுள்ளன.
பிற செய்திகள்




