பூநகரி- கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் ஆரம்பம்

பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய நக்டா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட 16 இடங்களில் பண்ணைகளை அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கான பயனாளர்கள், கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பண்ணைகளை அமைப்பதற்கு தேவையான வலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு தொகுதி வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பொருத்தமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டு கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் செயற்பாடுகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டமிடலில் வடக்கு மாகாணத்தில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கௌதாரிமுனை பிரதேசத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களும் நிரந்தர வாழ்வாதாரத்தினை வழங்கக் கூடிய கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

அதனால், இதுவரை சுமார் 30 இற்கும் மேற்பட்டவர்கள் கடலட்டைப் பண்ணைகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில் இதுவரை பொருத்தமான 16 இடங்களை நக்டா எனப்படும் தேசிய நீரயல் வள அபிவிருத்தி அதிகார சபை அடையாளப்படுத்தியுள்ள நிலையில், அவற்றில் பண்ணைகளை அமைக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *