முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை குருந்தூர்மலையில் புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கை இன்று காலை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ,மக்களின் எதிர்ப்பால் குறித்த நிகழ்வு கைவிடப்பட்டுள்ளது.
புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் , இன்று காலை ஒன்பது மணிக்கு நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும் நிகழ்விருந்தது.இதனை அடுத்து மக்களால் அங்கு எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதனை அடுத்த நிகழ்வு கைவிடப்பட்டது.
இதனை அடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த தொல்பொருள் சார்ந்த அதிகாரிகள்,விகாரையின் கட்டுமானப் பணிகளுடன் கூடிய,அனைத்து வேலைகளையும் தற்காலிமாக இடைநிறுத்துமாறு கூறியுள்ளனர்.இந்த நிலையில் அங்கிருந்து கட்டுமானப் பொருட்கள்,மற்றும் பிரதிஸ்டை நிகழ்வுக்குரிய பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.எனினும் குறித்த விகாரையின் 80 வீதமான பணிகள் நிறைவைடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு தமிழ் மக்கள் யாரும் செல்வதற்கு இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தடை ஏற்படுத்தி வந்திருந்த நிலையில் தொல்லியல் ஆய்வுப்பணிகள் இடம்பெற்றது.
சம நேரத்திலேயே அங்கு மிக பிரமாண்டமான முறையில் புராதன கால செங்கற்களை ஒத்த செங்கற்கள் செய்யப்பட்டு குருந்தூர் மலைக்கு கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் இரவு பகலாக கட்டுமானம் இடம்பெற்றுவந்தது
இந்த நிலையில் தற்போது விகாரை அமைக்கும் வேலை முற்றுப்பெற்று விகாரையின் உச்சியில் உள்ள கலசத்தில் பூசை வழிபாடுகளை செய்யும் நிகழ்வும் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் இன்று இடம்பெறவிருந்த நிலையில் மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் ,வினோநோகராதலிங்கம் முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதேச சபை உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.மக்களின் எதிர்ப்பு நடவைடிக்கையை அடுத்து நிகழ்வு கைவிடப்பட்டுள்ளது.