முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர்! கஜேந்திரகுமார்

தமிழர்கள் போன்றே முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு காந்திஜீ விளையாட்டு கழகத்தின் 25 ஆவது ஆண்டினை முன்னிட்டு இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,

எனக்கு 20 வருட அரசியல் அனுபவம் உண்டு.இந்த நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை அரசாங்கம் அனுபவித்து கொண்டிருக்கின்றது.

இந்த அரச கட்டமைப்பிற்குள் உள்ள மக்கள் எவ்வாறு சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதை நாம் அவதானிக்கலாம்.

கடந்த 30 வருடங்களாக இலங்கை அரசாங்கம் தமிழர்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு போரால் அழித்தது.பின்னர் போர் நிறைவுற்ற 13 வருடங்களின் பின்னரும் தமிழருக்கு இந்த நிலை தொடர்ந்தது.

74 வருடங்களாக பல்வேறு கட்டமைப்புடன் தமிழர்களை அழித்த அரசாங்கம் வங்குரோத்து நிலைமைக்கு சென்றிருக்கின்றது.

இந்த நாட்டில் வருடாந்த வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பிற்கு 19 வீதம் ஒதுக்கப்படுகின்றது.அதில் ஒரு வருடத்திற்கு இராணுவத்தினரின் தேவைக்கு வரவு செலவு திட்டத்தில் 13 வீதம் ஒதுக்கப்படுகின்றது.

கல்வி மற்றும் சுகாதார பிரிவிற்கு பாதுகாப்பு செலவிற்கு என ஒதுக்கப்படுகின்ற வீதத்தில் அரைவாசியே ஒதுக்கப்படுகின்றது.இந்த நாட்டின் சொத்து மனிதர்கள் எனின் அவர்களுக்கு கல்வியும் சுகாதாரமும் அவசியம்.

இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழிப்பதற்காகவே பாதுகாப்பிற்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கின்றது.தமிழர்கள் போன்றே முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பில் 20 டிவிசன்கள் இருக்குமாயின் அதில் 16 டிவிசன்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றது.தற்போதைய சூழ்நிலையிலும் கூட ஜனாதிபதி கோட்டபாய இராணுவத்தினருக்கான எந்தவொரு வளமும் குறைக்கப்பட மாட்டாது என கூறி இருக்கின்றார்.

இது இனவாதத்தின் ஒரு விளைவாகும்.எமது உரிமையில் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இன்றி நாம் மிக இறுக்கமாக இருக்க வேண்டும்.அதே போன்று ஏனையவர்களது உரிமைகள் அந்தஸ்துக்களையும் நாம் வழங்குவதற்கு தயங்க கூடாது என கேட்டுக்கொண்டார்.

மேலும் காந்திஜீ விளையாட்டு கழகத்தின் 25 ஆவது ஆண்டினை முன்னிட்டு கழகத்தினருக்கான புதிய ரீ சேட் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் த.தே.மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இணைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தன், தமிழ்ர் தேசிய பேரவை உறுப்பினர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *