கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று திங்கட்கிழமை (13) வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.

கடந்த 3 ஆண்டுகளுக்குப் பின்னர் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனியும் இன்று இடம்பெறவுள்ளது. ‍

மேலும், திருத்தல பீடத்தின் அருகில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்திற்கு 200 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகின்றது.

கடந்த 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவின் வேஸ்பர்ஸ் ஆராதனை கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஞாயற்றுக்கிழமை (12) இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

திருநாள் தினமான இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளைகளில் 4 மணிக்கு தமிழ் மொழியிலும், 5 மணிக்கு சிங்கள மொழியிலும், 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருவிழா திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

இதன் பின்னர் திருவிழா பாடற் திருப்பலிகள் காலை 8 மணிக்கு தமிழ் மொழியிலும், கா‍லை 10 மணிக்கு சிங்கள மொழியிலும், நண்பகல் 12 மணிக்கு ஆங்கில மொழியிலும் ஒப்புக்கொடுக்கப்படும்.

இதன் பின்னர் மாலை 5.00 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இடம்பெற்று, இரவு 8 மணியளவில் நற்கருணை ஆசீர்வாதமும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெறும்.

திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆலயத்திலும், ஆலயத்திற்கு வெளியேயும் செய்யப்பட்டுள்ளன.

இதனால் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், திருவிழா தினத்தன்று புனிதரின் பவனிவரவுள்ள ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் மூடப்பட்டிருக்கும் எனவும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *