குருந்தூர் மலையில் புத்தரின் சிலையை வைத்து வழிபட முயற்சி – அன்ரனி ஜேசுதாசன்கண்டனம்

தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தரின் சிலையை வைப்பதற்கு
அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலைப்பகுதி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு இனங்காணப்பட்ட தொல்பொருள் இடத்தில் புதிதாக விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த விகாரையின் சிறப்பு வழிபாடு ஒன்றினை மேற்கொள்ள தென்னிலங்கையில் இருந்து பௌத்த மதகுருமார்கள், மக்கள் என பலர் நேற்று வருகைதந்தபோது எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்களின் நடவடிக்கையினால் இந்த வழிபாடுகள் கைவிடப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையில் நடைபெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தரின் சிலையை வைப்பதற்கு தென்னிலங்கையிலிருந்து குழுவாகச் சென்று பௌத்த பிக்குகள் எடுத்த முயற்சி அதற்கு பாதுகாப்பு படையினர் வழங்கிய பாதுகாப்பு இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விடயமாக இருக்கிறது.

30 வருட கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிலைமாறுகால நீதியினை நிலைநாட்டிநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு 2009-க்கு பிறகு ஆட்சிக்கு வந்த எந்த அரசும் சரியான முயற்சிகளை எடுக்கவில்லை.

இந்தநிலையில் வடக்குப் பகுதியில் இருக்கின்ற காணிகளையும் அந்த மக்களுடைய பாரம்பரிய சொத்துக்களையும் சூறையாடுவதற்கு எடுக்கின்ற முயற்சி மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

இராணுவமயமாக்கல், வன பாதுகாப்புத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என கூறி மக்களுடைய காணிகளையும் வரலாற்று சின்னங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கையினை இந்த அரசாங்கம் முற்றாக நிறுத்த வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *