ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற இலங்கை ஏன் பின்வாங்குகிறது?

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கம் எதற்காக பின்வாங்குகிறது? அமெரிக்க தூதுரகத்தின் அழுத்தத்தின் காரணமாகவா? இலங்கையின் அரசியல் விவகாரங்களில் குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்தில் அமெரிக்க தூதரகத்தின் தலையீடு காணப்படுவதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நாடு வங்குரோத்தடைந்து விட்டது என்பதற்கு பதில் வங்குரோத்தடைய வேண்டுமா? என்ற தொனிப்பொருளில் கொழும்பு – தும்முல்லையில் அமைந்துள்ள சம்புத்த ஜயந்தி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரஷ்யாவிடமிரருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு எதற்காக இவ்வளவு தயக்கம் காண்பிக்கப்படுகிறது? இந்தியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் எரிபொருளை இறக்குமதி செய்கின்றன.

இலங்கை முன்னரே அந்த நடவடிக்கையை எடுக்காமலிருந்தது தவறு என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து அமைந்துள்ளது. இந்த விடயத்தில் ஏன் அரசாங்கம் பின்வாங்குகிறது?

இந்து – பசுபிக் செயற்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவை முன்னிலைப்படுத்தி எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அமெரிக்க தூதரகம் அழுத்தம் பிரயோகித்ததா? காரணம் இலங்கையின் உள்ளக விவகாரங்களிலும் , அரசியல் விவகாரங்களிலும் அமெரிக்க தூதரகத்தின் தலையீடு அதிகமாகவே உள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்தில் கூட அமெரிக்காவின் தலையீடு காணப்படுகிறது.

காரணம் நாம் அரசாங்கத்திலிருந்து விலகிய பின்னர் சர்வகட்சி தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்திருந்தார். எனினும் திடீரென எவருக்கும் அறிவிக்காமல் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.

இதில் அமெரிக்க தூதுரகத்தின் தலையீடு காணப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். எனவே ரஷ்ய – உக்ரைன் மோதலில் ரஷ்யாவுடன் எவ்வித கொடுக்கல் வாங்கல்களையும் முன்னெடுக்கக் கூடாது என்ற மேற்குலக நாடுகளின் தீர்மானத்தினால் இலங்கைக்கு அமெரிக்கா இவ்வாறான அழுத்தத்தினை பிரயோகிக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *