மன்னாரில் அதிக விலையில் அரிசி விற்ற விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

அரசாங்கத்தினால் அரிசிக்கு அதி உச்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில்
மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை மேற்கொண்ட வியாபாரிகள் மீது இன்று திங்கட்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மன்னார் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அரிசியின் நிர்ணய விலை காட்சிப்படுத்தாது அரிசி விற்பனையில் ஈடுபட்டமை, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்தவர்கள் மற்றும் அரிசியை பதுக்கி வைத்த சில வர்த்தகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளை நாடு 220 ரூபாய்க்கும், சிவப்புபச்சை 210 ரூபாய்க்கும், சம்பா 230 ரூபாய்க்கும், வெள்ளப்பச்சை 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யும்படி அரசாங்கத்தினால் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது ஒருலட்சம் தொடக்கம் ஐந்து லட்சம் வரை அபராதமும் மொத்த வியாபார நிலையங்களுக்கு ஐந்து லட்சம் தொடக்கம் ஐம்பது லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த விசேட ரோந்து நடவடிக்கை மன்னார் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளதுடன், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் பொருட்களை பதுக்கி வைப்பவர்கள் மீதும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பாக மன்னார் நுகர்வோர் பாதுகாப்பு சபையில் பொதுமக்கள் நேரடியாக முறைப்பாட்டை மேற்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *