புத்தளம்,ஜுன் 13
புத்தளம் பகுதியில் தேக்கு மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியது. மரக்கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை கடத்திய லொறி ஒன்று திங்கட்கிழமை (13) பிற்பகல் புத்தளம் நூர்நகர் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
புத்தளம் பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பணியகத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பகுதியில் குறித்த லொறியை நிறுத்த முற்பட்ட வேளையில் லொறியை நிறுத்தாமல் சாரதி தப்பிச்சென்றுள்ளது.
இதன்போது குறித்த கடத்தல் லொறியை பொலிஸார் துரத்திச் சென்றபோது லொறி வேகக் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது வீட்டின் மதில் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மரக்குற்றிகள் மின்கம்பத்தில் மோதூண்டு மின்கம்பம் உடைந்தமையினால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரக்குற்றிகளைக் கடத்தினார் எனக் கூறப்படும் சாரதி பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சாரதியையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி மற்றும் தேக்கு மரக்குற்றிகளையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் மற்றும் புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக இதன்போது தெரிவித்தனர்.


