
கொழும்பு,ஜுன் 13
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மே மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று(13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை அறிவித்துள்ளது.
அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் ஏஞ்சலோ மெத்தியூஸின் துடுப்பாட்டம் இந்தப் பெயரிடலுக்குக் காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இரண்டு இலங்கை வீரர்களையும் ஒரு பங்களாதேஷ் வீரரையும் மே மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்காக பரிசீலித்த நிலையில் இறுதியில் மெத்தியூஸ் தெரிவானார்.
பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில், இரண்டு சதங்கள் உள்ளடங்களாக 344 ஓட்டங்களை குவித்த மெத்யூஸ், சண்டீஸ்கரில் நடந்த முதல் டெஸ்டில் 199 ஓட்டங்களை பெற்று இரட்டை சதத்தை நூலிழையில் தவறவிட்டார்.
மிர்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணிக்காக முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காது 145 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அணி வெற்றிபெற வழிவகுத்தார்.
இந்த போட்டியில் மெத்யூஸின் திறமை, ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 15 ஆவது இடத்திற்கு முன்னேறி, முதல் முறையாக ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வெல்ல உதவியது.
2021 ஜனவரியில் தொடங்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆண்டின் சிறந்த வீரர் (ICC POTM) விருதை வென்ற முதல் இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.