
கொழும்பு,ஜுன் 13
நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுவதைப் போன்று , நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கான வழிமுறைகளும் இலகுவாக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து நிறைவேற்றத்திகார பிரதமர் முறைமை தோற்றம் பெற்றுவிடாமல் இருப்பது தொடர்பிலும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், தற்போதைய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2015 நவம்பர் 12 ஆம் திகதி வரையே தேர்தல்கள் ஆணையாளர் என்ற தனிநபர் தீர்மானங்கள் எடுக்கக் கூடிய முறைமை காணப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் ஆணையாளருடன் தேர்தல் ஆணைக்குழுவின் ஏனைய இரு உறுப்பினர்களும் இணைந்து மூவரும் ஒருமித்து தீர்மானங்களை எடுக்கக் கூடிய முறைமை உருவாக்கப்பட்டது.
அதற்கமைய அதன் பின்னரான காலப்பகுதியில் வேட்புமனு தாக்கல் வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணையாளர் மற்றும் ஏனைய இரு உறுப்பினர்களதும் கையொப்பத்துடனேயே வெளியிடப்பட்டது.
எனவே இரட்டை குடியுரிமையுடைய பிரஜை வேட்புமனு தாக்கல் செய்யும் விவகாரத்தில் தேர்தல் ஆணையாளர் ஏகமனதாக செயற்பட்டார் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.