வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை நிராகரிப்பு; புலம்பெயர் சமூகத்திற்கு விசேட அழைப்பு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளது.

இந்த பொறிமுறையானது துருவப்படுத்துவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் மட்டுமே உதவும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் எச்சரித்துள்ளார்.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் வளங்களை செயற்றிறன் அற்ற மற்றும் பயனற்ற விடயத்திற்கு பயன்படுத்துவதாகவே அமையும் எனவும், நாட்டின் நலனுக்காக புலம்பெயர் சமூகத்துடனும், குடிசார் சமூக அமைப்புகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார்.

46 இன் கீழ் ஒன்று தீர்மானமானது தமது அரசாங்கத்தினதும் பேரவையின் ஏனைய நாடுகளினதும் அனுமதியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று எனவும் கூறியுள்ளார்.

நாட்டின் சவாலான சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் பேரவையின் புரிதலை அரசாங்கம் கோருவதாகவும், தமக்கு முன்னால் உள்ள பல பணிகளை மேற்கொள்ளும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும், நாட்டின் நியாயமான கடப்பாடுகளுக்கு மதிப்பளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீதியுடன் கூடியதாக மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், மக்களை சமமாக நடத்துதல் போன்ற விடயங்களை யதார்த்தமாக்குவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடனும், சர்வதேச சமூகத்துடனும் அரசாங்கம் தொடர்ந்தும் நெருக்கமாக செயற்பட்டு வருவதுடன், பலதரப்பட்ட கட்டமைப்புக்குள் செயற்றிறன் மிக்க பங்களிப்பை மேற்கொண்டு வருவதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் குறிப்பிட்டுள்ளார்.

சவால்களை கண்டு துவண்டுவிடாமல், சுருங்கிவிடாமல் அவற்றை அங்கீகரிப்பது செயற்படுவதே அரசின் அணுகுமுறையாகும் எனவும்,சர்வதேச சமூகத்தின் நீடித்த நல்லெண்ணம் மற்றும் ஆதரவால் நாங்கள் பெரிதும் பலப்படுத்தப்பட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய வாரங்களில் இலங்கை எதிர்கொண்டுள்ள பாரதூரமான சமூக மற்றும் பொருளாதார நிலைமையை சர்வதேச சமூகம் அறிந்துள்ளதாகவும், தொற்றுநோய் உள்ளிட்ட உலகளாவிய நெருக்கடிகளால் இந்த நிலைமை மோசமாகிவிட்டாலும் போராட்டங்கள் குறித்து கவனம் செலுத்தி, பொருளாதார நிவாரணம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *