இலங்கை- இந்தியா உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்- ஜி.எல்.பீரிஸ்

இலங்கை- இந்திய நட்புறவு நகர்வுகளில் உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து, பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என வெளிவிவகாரதுறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லாவின் இலங்கை விஜயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா இலங்கையில் தங்கியிருக்கும் குறித்த காலகட்டத்தில், மிகப்பெரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் கிராமங்களை பலப்படுத்தும் வேலைதிட்டங்களான முன்மாதிரி கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளன. இதற்காக இலங்கை ரூபாயில் 900 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது.

அதேபோன்று மெனிக் பார்ம் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையிலுள்ள சகல மாவட்டங்களிலும் 25 வீடுகள் என்ற திட்டத்தின் கீழ் நான்காயிரம் இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது.

இவ்வாறான வேலைத்திட்டங்களை இந்திய அரசாங்கம் எமக்கு செய்து கொடுக்கின்றமையை மிகப்பெரிய பலமாகவே கருதுகின்றோம்.

இலங்கை எப்போதும் இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை கையாண்டு வருகின்றது. தொடர்ந்தும் நாம் நட்புறவை பேணிப்பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *