மருத்துவர் கிறீனும் யாழ்ப்பாண மருத்துவ வரலாறும்

யாழ்ப்பாண மருத்தின் வரலாற்றைப் பேசும்போது, மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீன் மறக்கப்ட முடியாதவர். தமிழர்களின் மருத்துவ ஊழியர் என்று கூறப்படும் கிறீனின் 200 பிறந்த தினம் நினைவுகூரப்படும் அதேநேரம், இலங்கையின் வடபுல யாழ்ப்பாணத்தில் 26 வருடங்கள் தன்னலமற்ற சேவை செய்த அமெரிக்க மருத்துவரான சாமுவேல் பிஸ்க் கிறீன்  மறைந்து 138 வருடங்கள் நிறைவு பெற்றமை நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது.

உலகின் முதல் மிஷனரி வைத்தியசாலை
மருத்துவர் ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder) 1819 டிசெம்பர் 17 ஆம் திகதி இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள தெல்லிப்பளைக்கு வந்தஅ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நியூயோர்க்கில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த ஜோன் ஸ்கடர் என்னும் அமெரிக்கரே மேலைத்தேய (அலோபதி) மருத்துவத்தைப் பரப்புவதுக்காக ஆசியாவுக்கு அனுப்பப்பட்ட உலகின் முதலாவது மிசனரி மருத்துவராவார்.
மேலைத்தேச மருத்துவத்தைப் பரப்பும் நோக்குடன் ஆசியாவில் அமைக்கப்பட்ட உலகின் முதல் மருத்துவ சிகிச்சை நிலையம் வைத்தியர் ஜோன் ஸ்கடரால் பண்டத்தரிப்பில் 1820.06.18 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

தமிழில் ஆங்கில மருத்துவம் கற்பித்த அமெரிக்கர்
அமெரிக்காவில் மசாசுசெட்சில் பிறந்த மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீன் அமெரிக்க மிசனரி மருத்துவராக 1847 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். கிறீனும் தனது சிகிச்சை நிலையத்தை (டிஸ்பென்சரி) பண்டத்தரிப்பிலேயே ஆரம்பித்தார். ஆனால் தனது மருத்துவக் கல்லூரியை மத்திய பகுதியில் அமைந்துள்ள மானிப்பாயில் 1848 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்பட்ட பாடநெறியே இங்கும் பாடத்திட்டமாக அமைந்தது. 3 வருட மருத்துவக் கற்கை நெறி ஆங்கில மொழி மூலம் ஆரம்பிக்கப்பட்டது.

லத்தீன், ஜெர்மன் முதலான மொழிகளில் புலமை பெற்றிருந்தது போன்று தமிழிலும் பாண்டித்தியம் பெற்ற மருத்துவர் கிறீன் தனது மாணவர்களின் உதவியுடன் 8 மருத்துவ நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். இந்த நூல்களை விட அருஞ்சொற்கள் அகராதிகள், மருத்துவ மாணவர்களுக்குப் பயன்படும் சிறு கையேடுகள், கட்டுரைகள் முதலாக மருத்துவர் கிறீன் மொழிபெயர்த்து மேற்பார்வை செய்த தமிழ் எழுத்துக்கள் 4 ஆயிரத்து 500 பக்கங்களில் வெளிவந்துள்ளன.

மருத்துவர் கிறீன் 1864 இல் தமிழ் மொழி மூலம் மருத்துவக் கற்கை நெறியை ஆரம்பித்தார். இந்தியத் துணைக்கண்ட மொழிகளில் முதன்முதலில் தமிழிலேயே மேலைத்தேச (அலோபதி) மருத்துவம் யாழ்ப்பாணத்தில் மானிப்பாயில் கற்பிக்கப்பட்டது. கிறீனது மருத்துவக் கல்லூரியில் பயின்றவர்களில் 33 பேர் தமிழ் மொழி மூலம் மருத்துவம் பயின்று பட்டம் பெற்றனர். இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு அமெரிக்கர் செவ்வியல் மொழிகளில் ஒன்றாக விளங்கும் தமிழில் ஆங்கில மருத்துவம் கற்பித்தார் என்ற செய்தி வியப்புக்குரியது.

தமிழ் அறிவியல் மொழியாக வளர்ச்சியடைவதுக்கு கலைச்சொல் உருவாக்கம் அவசியமாகின்றது. தமிழ் மொழியில் கலைச் சொல்லாக்க முன்னோடியாக மருத்துவர் கிறீன் கருதப்படுகிறார்.

மானிப்பாயில் கிறீன் மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இலங்கை அரசாங்கம் மருத்துவர் கிறீனது சேவையை கௌரவித்து 1998 ஆம் ஆண்டு முத்திரையையும் முதல் நாள் உறையையும்  வெளியிட்டுச் சிறப்பித்து.

யாழ்ப்பாணத்தில் 26 வருடங்கள் மருத்துவராக சேவை செய்த கிறீன் தமிழுக்குத், தமிழர்களுக்கு ஆற்றிய தொண்டு அவரது 200 ஆவது பிறந்த ஆண்டில் நினைவு கூரப்படல் வேண்டும். அதைச் சிறப்பிக்கும் வண்ணம் மருத்துவர் கிறீன் அவர்களது 200ஆவது பிறந்த ஆண்டு நினைவு மலர் (Dr. Green’s Birth Bicentenary Book) வெளியிடப்பட உள்ளது.

மருத்துவர் கிறீன் தனது தமிழ் மாணவர்களின் உதவியுடன் மொழி பெயர்த்த ஆங்கில மருத்துவ நூல்கள் சில:

இரண வைத்திய விஞ்ஞானக் கலைநுட்பம்  – இது மானிப்பாயில் உள்ள ஸ்திரோங் அஸ்பெரி அச்சகத்தில் 1867 இல் அச்சிடப்பட்டது.
மனுஷ  சுகரணம் – இது மானிப்பாயில் உள்ள ஸ்திரோங் அஸ்பெரி அச்சகத்தில் 1833 இல் அச்சிடப்பட்டது.
வைத்தியாகரம் – இது நாகர்கோயிலில் உள்ள அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1872 இல் அச்சிடப்பட்டது.
இந்துப்  பதார்த்த சாரம் – இது மானிப்பாயில் உள்ள ஸ்திரோங் அஸ்பெரி அச்சகத்தில் 1888 இல் அச்சிடப்பட்டது.
மனுஷவங்காதிபாதம் – இது நாகர்கோயிலில் உள்ள அமெரிக்க மிஷன் அச்சகத்தில் 1872 இல் அச்சிடப்பட்டது.
கெமிஷ்தம் – இது நாகர்கோயிலில் உள்ள அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1875 இல் அச்சிடப்பட்டது.
வைத்தியம் – இரண்டாம்பாகம் (தமிழல் மருத்துவம் பயின்றவர்களுக்காக மருத்துவர் கிறீன் அவர்களால் மானிப்பாயில் உள்ள ஸ்திரோங் அஸ்பெரி அச்சகத்தில் 1875 இல் அச்சிடப்பட்டது.
மருத்துவவைத்தியம் – இது ரிப்பிலி ஸ்திரோங் அச்சகத்தில் 1857 இல் அச்சிடப்பட்டது.
அருஞ்சொற்களை அடக்கிய – இது நாகர்கோயிலில் உள்ள இலண்டன் மிஷன் அச்சகத்தில் 1875 இல் அச்சிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *